பக்கம்:நித்திலவல்லி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நித்திலவல்லி / முதல் பாகம்


செய்துவிட்டு அதற்கு விலையாக குதிரைகள் பெற ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். சோனகா நாட்டிலிருந்து வரும் இந்தக்குதிரைக் கப்பல் கொற்கைத் துறையை வந்தடையும் நாளையும், துறைமுகத்திலிருந்து அவற்றைத் தலைநகருக்குக் கொண்டுவர எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள், எவ்வளவு களப்பிரப் பாதுகாப்பு வீரர்கள் குதிரைகளோடு உடன் வருவார்கள் என்பதை எல்லாம் நீ தெரிந்து சொல்லியனுப்ப வேண்டும். இவற்றை உன்னிடமிருந்து தெரிந்து எனக்கு வந்து சொல்லவும், என்னிடமிருந்து தெரிவனவற்றை உனக்கு வந்து சொல்லவும் உரியவர்கள் மதுரை மாநகரில் அவ்வப்போது உன்னைச் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது நீ புறப்படலாம். காராளர் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். மற்ற விவரங்களைப் போகும் போதே அவர் உன்னிடம் சொல்வார்.”

பெரியவரை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டான் இளையநம்பி.


4. செல்வப் பூங்கோதை

“ஐயா! முனையெதிர் மோகர் படைக்கும் தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் இவ்வளவு உதவிகளைச் செய்யும் உங்களுக்குக் களப்பிரர்களால் எந்தக் கெடுதலும் வராமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை-” என்று உடன் நடந்துகொண்டே பெரிய காராளரிடம் கேட்டான் இளைய நம்பி. அதற்கு அவர் மறுமொழி கூறினார்:

“எனக்கு அப்படிக் கெடுதல் எதுவும் வர முடியாது. களப்பிரர்களின் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நான்தான் நெல் அனுப்புகிறேன். அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/37&oldid=715075" இலிருந்து மீள்விக்கப்பட்டது