பக்கம்:நித்திலவல்லி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


முத்தரையரும், அவர்களோடு, கை கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில், தென்னவன் மாறனும், மல்லனும் தென்பட்டனர்.

சிறையிலிருந்து வெளியேற முயன்ற அனைவருமே, திட்டமிட்டுப் பிடிக்கப்பட்டு விட்டதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அந்த நிலையில் குறளன் மட்டும் தப்ப முடிந்ததை ஒர் அதிசயமாகத்தான் நினைத்தான் அவன்.

இப்படி வகையாக மாட்டி வைப்பதற்காகவே ஒரு நீலிக் கண்ணீர் நாடகமாடினாளோ என்று காம மஞ்சரியைப் பற்றியே இப்போது சந்தேகம் வந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே, மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து அந்தச் சந்தேகம் நியாயமற்றது என்பதை உணர்ந்து அப்படி நினைத்ததற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அழகன் பெருமாள். மாவலி முத்தரையர் இடிக் குரலில் கூறினார்;

“எவ்வளவுதான் நடித்தாலும், நீங்கள் எல்லோரும் யாரென்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. இனி நீங்கள் தப்ப முடியாது. உங்களுக்கு உதவி புரிந்த அந்தக் கேடு கெட்ட காம மஞ்சரியும் தப்ப முடியாது. நீங்களே உங்களைத் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டு விட்டதற்கு நன்றி.”

அழகன் பெருமாள் முதலியவர்களும், தென்னவன் மாறனும், மல்லனும் இதைக் கேட்டு குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். அந்த நிலையில் அவர்களிடம் மேலும் மாவலி முத்தரையரே பேசலானார்;

“இப்போது கூட ஒன்றும் குடி முழுகி விடவில்லை! எனக்குத் தெரிய வேண்டிய ஒரு பெரிய உயிர் நிலைச் செய்தி உங்களிடமிருந்து தெரியுமானால் மற்ற எல்லாத் தவறுகளையும் மறந்து, உங்களை நான் விட்டு விட முடியும். அந்த மதுராபதி வித்தகன் எங்கே இருக்கிறான் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது. இடத்தைச் சொல்ல முடியாவிட்டால், ஊரைச் சொல்லுங்கள். ஊரைச் சொல்ல முடியாவிட்டால் திசையைச் சொல்லுங்கள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/375&oldid=946592" இலிருந்து மீள்விக்கப்பட்டது