பக்கம்:நித்திலவல்லி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

377



தமது இந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களில் உயிர்ப் பயமும், விடுதலையாகும் வேட்கையும் உள்ள யாராவது ஒருவனாயினும் முன் வருகிறானா என்று, அழகன் பெருமாள் முதலிய ஒவ்வொருவர் முகமாக ஏறிட்டுப் பார்த்தார் மாவலி முத்தரையர். யாருடைய முகத்திலும் இசையும் சிறு அடையாளம் கூடத் தென்படவில்லை. இந்த முயற்சியைக் கனிவாகவும், கடுமையாகவும், பயமுறுத்தியும் தொடர்ந்து சிறிது நேரம் வரை செய்து பார்த்தார் மாவலி முத்தரையர். எந்தப் பயனும் விளையவில்லை. முடிவில் குரூரமும், வெறுப்பும் நிறைந்து வெடிக்கும் கடுமையான குரலில் தென்னவன் மாறன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டி, ‘இந்தப் புலித்தோல் அங்கிக்காரனைத் தவிர மற்றவர்களை ஒளியே நுழைய முடியாத இருட்டறையில் கொண்டு போய்த் தள்ளுங்கள். பல ஆண்டுகள் சிறையில் கிடந்து ஒவ்வொருவராகச் செத்துத் தொலையட்டும்” என்றார் அவர். உடனே பூத பயங்கரப் படைவீரர்கள் பாய்ந்து சிறைப்பட்டவர்களை இழுத்துக் கொண்டு சென்றனர். தென்னவன் மாறனை மட்டும் பூத பயங்கரப் படைத் தலைவனும், மற்ற இரு வீரர்களும் வேறு திசையில் இழுத்துச் சென்றனர். கால்களில் தளரத் தளர இடம் விட்டுப் பிணைக்கப் பட்டிருந்த இரும்புச் சங்கிலியின் காரணமாக, தள்ளாடித் தள்ளாடி இயல்பாக எட்டு வைத்து நடக்க முடியாமல், சிரமப் பட்டுச் சென்றான் தென்னவன் மாறன். மாவலி முத்தரையர் களப்பிரக் கலியரசனைக் காணச் சென்றார். அப்போது உடனே அரசனைக் கண்டு, தென்னவன் மாறனையும், காம மஞ்சரியையும் கடுமையாகத் தண்டிக்குமாறு வற்புறுத்த வேண்டியிருந்தது அவருக்கு.

இப்பால் அழகன் பெருமாள் முதலியவர்களை இழுத்துச் சென்ற பூத பயங்கரப் படை வீரர்கள் முன்னை விடக் கொடுமையானதும் இருட்குகை போன்றதும் ஆகிய ஒரு பயங்கரச் சிறைக் கூடத்தில் அவர்களைத் தள்ளி அடைத்தார்கள். அப்போது தங்களை அடைத்த வீரர்களில் ஒரு பூத பயங்கரப்படை வீரனிடம் தனக்குத் தெரிந்த அளவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/376&oldid=946593" இலிருந்து மீள்விக்கப்பட்டது