பக்கம்:நித்திலவல்லி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


பாலி உச்சரிப்போடு, “ஏனப்பா, அந்தப் புலித்தோல் அங்கி வீரரை எப்போது இங்கே கொண்டு வந்து எங்களோடு அடைப்பார்கள்?” என்று வினாவினான் அழகன் பெருமாள். இதற்கு, முதலில் அந்த வீரன் பதில் கூறவில்லை. வஞ்சகம் தோன்றச் சிரித்தான். பின்பு சிறிது நேரம் கழித்துப் போகிற போக்கில் மிகவும் சுருக்கமாக, ‘எப்போதும், எங்கும் திரும்பி வர முடியாதவர்களைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிராதே அப்பனே!’ என்று பாலியிலேயே பதில் சொல்லி விட்டுப் போனான் அந்த வீரன். இந்த மறுமொழியைக் கேட்டு அழகன் பெருமாளும் நண்பர்களும் துணுக்குற்றனர். தென்னவன் மாறனை உயிர் மீட்கும் காரியத்தை மேற்கொண்டு, அதன் பொருட்டே கோட்டைக்குள்ளே வந்த தாங்கள் அதை நிறைவேற்ற முடியாமற் போகிறதே என்று துடிதுடித்துத் தவித்தார்கள் அவர்கள். தாங்கள் தலைவணங்கும் குலக்கொழுந்து ஒன்று கருகுவதை அழகன் பெருமாளால் எண்ணிப் பார்க்கவும் முடியாமல் இருந்தது. பெரியவர் தங்களுக்கு ஒலை மூலம் அனுப்பிய கட்டளையை இன்று தாங்கள் நிறைவேற்ற முடியாமற் போய் விட்டதே என்ற துயரத்தின் சுமை அவன் நெஞ்சை அழுத்தியது.

“எக்காரணத்தைக் கொண்டும் திருக்கானப்பேர் நம்பியைத் தென்னவன் மாறனை மீட்கும் பணிக்காகக் களப்பிரர் அரண்மனைக்குள்ளோ, கோட்டைக்குள்ளோ போக விடக் கூடாது” என்று பெரியவர் வற்புறுத்தித் தடுத்திருந்ததன் பொருள் இப்போது அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அந்த எச்சரிக்கையின் பயன் இமய மலையளவு பெரிதாகித் தோன்றியது இப்போது. ஒரு குலக் கொழுந்தைக் கருக விடாமல் காப்பாற்றிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட, இன்னொரு குலக் கொழுந்தை அனுப்புவதன் மூலம் அந்த இரண்டு குலக் கொழுந்துகளையுமே பகைவர் கருக்கி விடக் கூடாது என்ற கவலையும் முன்னெச்சரிக்கையும் கவனமும் கொண்டு, பெரியவர் காரியங்களைத் திட்டமிட்டிருக்கும் திறனை இந்த வேதனையான சூழ்நிலையிலும் அழகன் பெருமாளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தங்களோடு சிறையிலிருந்து விட்டுத் தப்பிப் போயிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/377&oldid=946594" இலிருந்து மீள்விக்கப்பட்டது