பக்கம்:நித்திலவல்லி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


ஒடுங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை அவரும் நன்கு புரிந்து கொண்டார். தம்மிடமிருந்து கட்டளை வருவதற்கு முன் இளைய நம்பி இரத்தினமாலையின் மாளிகையிலிருந்து எங்கும் வெளியேறக் கூடாதென்று மீண்டும் அவனை வற்புறுத்திச் செய்தி அனுப்பியிருந்தார் பெரியவர். கண்ணை இமை பாதுகாப்பது போல், அவனை அகலாமல் அருகிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இரத்தினமாலைக்கும் இரகசியமாகச் சொல்லி அனுப்பியிருந்தார் அவர். தென்னவன் மாறனை இழந்து விட்ட சூழ்நிலையில், இளைய நம்பியைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத தாகியிருந்தது. இளம் பருவத்தினனும், இணையற்ற வீரமுடையவனும் ஆகிய ஒருவனை ஆடல் பாடல்களும், சுவையான உணவும், அலங்காரமும், சுகபோகங்களும் மட்டுமே உள்ள ஒரு மாளிகையில் நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பதிலுள்ள சிரமங்களை மதுராபதி வித்தகரும் அநுமானித்திருந்தார். இருந்தாலும், வேறு வழியில்லாத காரணத்தாலும், இளைய நம்பி தங்குவதற்கு அதைவிடப் பாதுகாப்பான வேறு இடம் இல்லாததாலும், அவனை அங்கேயே தங்க வைத்துப் பத்திரமாகக் கவனித்துக் கொள்வது அவசியமாகி இருந்தது. உபசரிப்பதிலும், பேணிப் போற்றி அன்பாகப் பாதுகாப்பதிலும், இணையற்றுத் தேர்ந்திருந்த இரத்தினமாலை மட்டும் அருகில் இல்லா விட்டால், இளைய நம்பியை அப்படி ஒரே இடத்தில் உறையச் செய்திருக்க இயலாமற் போயிருக்கும். அவளால் மட்டுமே அது இயலும். அவளால் மட்டுமே அது அப்போது இயன்றதாகியிருந்தது.

நாட்டைக் கைப்பற்றுவதற்கான சூழ்நிலை கணிகிற வரை தாமும், தம்மைச் சேர்ந்தவர்களும், தம் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்களும் ஒடுங்கியிருப்பது போல் பாவனை காண்பிக்க எண்ணினார் பெரியவர். ஏறக்குறைய எட்டுத் திங்கள் காலம் வரை இந்த ஒடுக்கம் நீடித்தது. ‘பாண்டிய மரபாவது இனிமேல் தலை எடுப்பதாவது? அந்த மரபைத் தான் நாம் அடியோடு தொலைத்து விட்டோமே’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/382&oldid=946599" இலிருந்து மீள்விக்கப்பட்டது