பக்கம்:நித்திலவல்லி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


போய்ச் சேர்ந்து, அப்படிச் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாகக் குரலும் கொடுத்தான். தொடர்ந்து காராளரும், கொல்லனும் அந்த மரத்தைப் பற்றி ஏறி, மறுகரை சேர முடிந்தது. மறுகரையில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆபத்துதவிகள், உடனே மூவரையும் பெரியவரது இடத்திற்கு விரைந்து அழைத்துச் சென்றனர். நீண்ட காலத்திற்குப் பின்பு, பெரியவர் மதுராபதி வித்தகரை முதல் முதலாகச் சந்திக்கப் போகிறோம் என்று எண்ணும் போது காராளருக்கு மெய்சிலிர்த்தது.

அந்த மலையில் பெரியவர் தங்கியிருந்த குகையை அடைவதற்கு ஒரு நாழிகைப் பயணத்துக்கு மேல் ஆயிற்று. குகை வாயிலில் இருந்த முனையெதிர் மோகர் படைக்காவல் வீரர்கள் நல்லடையாளம் பெற்ற பின், இவர்களை உள்ளே செல்ல விட்டனர். ஆபத்துதவிகள் வெளியே தங்கி விட்டதால், முதலில் காராளரும், அடுத்துக் கொல்லனும், மூன்றாவதாகக் குறளனும் குகைக்குள்ளே சென்றனர்.

உள்ளே இருந்து தீப்பந்தத்தின் ஒளியில், பாறைமேல் மற்றொரு செம்பொற் சோதி சுடர் விரித்து இருப்பது போல், பத்மாசனம் இட்ட கோலத்தில் அமர்ந்திருந்தார் மதுராபதி வித்தகர். காலடியோசை கேட்டுக் கண் விழித்த அவர், நெஞ்சாண் கிடையாகக் கண்களில் நீர் மல்க வீழ்ந்து வணங்கிய காராளரையும், மற்றவர்களையும் வாழ்த்தினார். எழுந்து அங்கே வந்து, விழிகளில் உணர்ச்சி நெகிழ நின்ற காராளரை, நெஞ்சாரத் தழுவிக்கொண்டார். காராளர் குரல் உடைந்து உணர்வு பொங்கப் பேசலானார்;

“ஐயா! பல திங்களாகத் தங்களைக் காணும் பேறு இன்றித் தாய்ப் பசுவைத் தேடித் தவிக்கும் கன்று போல் தவித்துப் போனேன். திருமோகூர் முழுவதுமே இருள் சூழ்ந்தது போல் ஆகிவிட்டது. செய்வதற்குச் செயல்களும் இல்லை. செய்யச் சொல்லிக் கட்டளை இடுவாருமில்லை. நான் அநாதையைப் போல் ஆகியிருந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/384&oldid=946601" இலிருந்து மீள்விக்கப்பட்டது