பக்கம்:நித்திலவல்லி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


யும், மகளையும் கூட அழைத்துச் செல்வதா?” என்று உடனே வினாவினார் காராளர்.

“நீர் குடும்பத்துடனேயே செல்லுவது நல்லது. மெய்யாக நீர் செல்லும் அரச தந்திரக் காரியம் எதுவோ, அது உம் மனைவிக்கும் மகளுக்கும் கூடத் தெரியலாகாது” என்றார் பெரியவர். காராளரும் அதை ஒப்புக் கொண்டு உறுதி கூறினார்.

காராளரிடம் பேசி முடித்த பின், கொல்லனையும் குறளனையும் அழைத்து, “உனக்கும் குறளனுக்கும் நான் இடப்போகும் கட்டளை சிரமமானதுதான் என்றாலும், நம்முடைய முனை எதிர் மோகர் படை வீரர்கள் சிலரது துணையுடன், பாண்டிய நாட்டில் மோகூரிலும், வேறு பல இடங்களிலும் நாம் உருவாக்கி மறைத்து வைத்திருக்கும் வேல், வாள், கேடயம், ஈட்டி முதலிய படைக் கலங்களையும் பிற ஆயுதங்களையும், காராளர் தீர்த்த யாத்திரை முடிந்து திரும்புவதற்குள், நீங்கள் படிப்படியாய் நிலவறை வழியாக இரத்தினமாலையின் மாளிகைக்குள்ளே கடத்திக் கொண்டு போய் அங்கே அடுக்கி விட வேண்டும். இரத்தினமாலையின் மாளிகையில் இடம் போதாவிடில், அம்மாளிகையின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் வெள்ளியம்பல மன்றின் கீழுள்ள நிலவறைப் பகுதியிலும் ஆயுதங்களை அடுக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு போய் அடுக்கும் வேலை முடிந்ததுமே, நம் வீரர்களில் இருநூற்றுவருக்கு மேல் நிலவறை வழியே சென்று, இளையநம்பியோடு சேர்ந்து கொள்ள வேண்டும். மேலும் பன்னூறுபேர் வெள்ளியம்பல மன்றில் அடையாளம் காண் முடியாதபடி ஊடுருவ வேண்டும். சில நூறு பேர், நடுவூர் வசந்த மண்டபத் தோட்டத்தில் மறைந்திருக்க வேண்டும். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்வேன். இதற்கு இடையில் முடிந்தால் கொற்கையிலுள்ள குதிரைக் கோட்டத்துத் தலைவன், மருதன் இளநாக நிகமத்தானை என்னிடத்திற்கு அழைத்து வர ஒருவர் போய் வர வேண்டும்” இவ்வாறு கட்டளையிட்டு அவர்களை அனுப்பினார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/388&oldid=946605" இலிருந்து மீள்விக்கப்பட்டது