பக்கம்:நித்திலவல்லி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நித்திலவல்லி / முதல் பாகம்


“ஐயா! இதென்ன மங்கல அலங்காரங்கள்? நீங்கள் நாள் தவறாமல் உணவளித்துக் காப்பாற்றி வரும் எண்ணற்ற நாடோடிகளோடு ஒரு புது நாடோடியாக நானும் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். நாடு களப்பிரர்களிடமிருந்து விடுபடுகிறவரை இப்படி அலங்காரம் செய்யும் மகிழ்ச்சியைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை.”

“அப்படியல்ல! தங்களை எப்படிச் சிறப்பாக வரவேற்க வேண்டும் என்று நல்ல வேளையாக நாங்கள் அறிந்திருக்கிறோம். நான் நடத்தும் அறக்கோட்டங்களில் வைத்து உங்களுக்கு நான் விருந்திடப் போவதில்லை. உங்களை என் இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். சற்றே இந்தச் செம்மண் கோலத்தில் நில்லுங்கள்! என் மனைவியும் மகளும் உங்களுக்கு மங்கல ஆரத்தி சுற்றிக் கொட்ட விரும்புகிறார்கள்...”

முதலில் காராளரின் மனைவியென அவனால் உய்த்துணர முடிந்த முதிய அம்மையாரை அடுத்துக் கையில் ஆரத்திப் பாத்திரத்துடன் வந்தவளைக் கண்டதும் அவன் கண்கள் வியப்பால் மலர்ந்தன. முதல் நாள் அந்தி மாலையில் கையில் விளக்கோடு கொற்றவை கோவில் வாயிலிலிருந்து அவனுக்கு வழிகாட்டிய பேரழகியே அவள்.

பெண்கள் இருவரும் தனக்கு ஆரத்தி சுற்றிக் கொண்டிருந்தபோதே அவன் காராளரை நோக்கி,

“ஐயா! உங்கள் மகளுக்கு நான் நிறைய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மகளுடைய உதவி கிடைத்திராவிட்டால், நான் நேற்று மாலை நம் பெரியவருடைய இருப்பிடத்தைக் கண்டு சென்றிருக்கவே முடியாது” என்று நன்றி பெருகச் சொன்னான். உடனே அவர் தன் மகளை நோக்கிச் சிரித்தபடி கேட்கலானார்;

“செல்வப் பூங்கோதை! இவர் சொல்வது மெய்யா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே? நேற்றே இங்கு நம் இல்லத்திற்கு இவரை அழைத்து வந்திருக்கலாமே? எனக்கு இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமற் போய்விட்டது. அப்படியானால் நம் சிறப்புக்குரிய இந்த இளம் விருந்தாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/39&oldid=715093" இலிருந்து மீள்விக்கப்பட்டது