பக்கம்:நித்திலவல்லி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

399


அழகன் பெருமாளோ, மற்றவர்களோ கனவில் கூட நினைத்ததில்லை. இப்போது இந்த இருட் சிறையிலிருந்து வெளியே என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை அநுமானம் செய்வது கூடச் சிரமமாக இருந்தது. தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றித் தென்னவன் மாறனைத் தான் விடுவித்துப் பெரியவரிடம் அழைத்துச் செல்லுமுன், களப்பிரர்கள் அந்தப் பாண்டிய குல வீரனின் நல்லுயிரை இந்த உலகிலிருந்தே விடுவித்து விட்டார்கள் என்று எண்ணும் போது, அழகன் பெருமாளின் இதயம் கனத்தது. அவன் சிந்தனையில் விரக்தியும் வேதனையுமே வந்து தங்கின. அவன் எண்ணினான்:

‘நான் இந்த இருட்சிறையிலிருந்து மீண்டு உயிர் பிழைத்தாலும், இனி எந்த முகத்தோடு பெரியவர் முன்னிலையிலே போய் நிற்பேன்? அப்படிப் பெரியவர் முகத்தில் விழிக்க வெட்கப்படும் நிலையுடன் இந்தச் சிறையிலிருந்து மீள்வதை விட இதிலேயே நலிந்து ஒடுங்கி அழிந்து போவது மேல். நமது பெருமதிப்புக்குரியவர் நம்மை மதிக்காத நிலையிலும், உயிர் வாழ்வதா பெரிய காரியம்? “என்னால் சிறை மீட்க முடியாமற் போனதால், தென்னவன் மாறனைக் களப்பிரர்கள் கழு ஏற்றிக் கொன்று விட்டார்கள்” என்பதாக எப்படி நான் பெரியவரிடம் போய் வாய் கூசாமல் சொல்லுவேன்? தனக்கு இடப்பட்ட கட்டளையை வெற்றியுடன் நிறைவேற்றி விட்டு முன்னே போய் நிற்கிற வீரன் பட முடிந்த பெருமையைத் தோற்றுவிட்டு நிற்பவன் எதிர்பார்க்கவே முடியாது. நானோ தோற்று விட்டவன். இங்கிருந்து விடுபட்டு வெளியேறினாலும், பெரியவர் முன்னால் போய்த் தலை நிமிர்ந்து நிற்க எனக்கு இனி என்ன தகுதி இருக்கிறது! நான் இந்தச் சிறைக்குள்ளேயே சாவதுதான் மேல். எதனாலும் தாழ்ந்து போகக் கூடாது. தாழ்ந்து போய் விட்டால், அப்புறம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஆபத்துதவிகள் என்றாலே ஆபத்தில் உதவவும், மீட்கவும் கடமைப்பட்டவர்கள். நானோ உதவவும், மீட்கவும் முடியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/397&oldid=946615" இலிருந்து மீள்விக்கப்பட்டது