பக்கம்:நித்திலவல்லி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

401


முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல், எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டு விட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய நல்வினைக் காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.”

“ஆத்திரம் வரும் போதெல்லாம், உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாக வேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?”

“கோபித்துக் கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இதுதான்! வேறு போர்களிலிருந்தும், முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?...”

“யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரிய, பெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.”

“விரைவில் என்றால் எப்போது?”

“இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்...”

“மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள் பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக் கூட நம்மிடம் ஆள் வலிமை இல்லை...”

“போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.”

“அதில் சந்தேகமென்ன? தொடக்கமும், முடிவும் நியாயமும், இலக்கணமும் உடையது போர். அதற்கு இரு தரப்பிலும் வலிமை வேண்டும். ஆனால், ஒரு கலகத்தை எப்போதும், எப்படியும், எவ்வளவு குறைந்த வலிமையோடும்

நி.வ-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/399&oldid=946617" இலிருந்து மீள்விக்கப்பட்டது