பக்கம்:நித்திலவல்லி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


எங்கேயும் தொடங்கலாம். கலகத்துக்கு முடிவு இல்லை. போருக்குத் தொடக்கத்தைப் போலவே முடிவும் உண்டு...”

“களப்பிரர்களை எதிர்த்து இனி நாம் செய்ய வேண்டியது போரா, கலகமா?”

“நாம் நீண்ட காலம் காத்திருந்து விட்டோம். பல பூசல்களுக்கும், கலகங்களுக்கும் பின்பு கூட, நமக்குப் பயன் விளையவில்லை. போருக்குத்தான் முடிவான பயன் உண்டு! கலகத்துக்கு அது இல்லை. எனவே, இம்முறை நாம் எதைச் செய்தாலும், அது நமக்கு முடிவான பயனைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்.”

“அப்படியானால், இங்கே நீங்கள் அதற்குத் திட்டமிட வேண்டிய காலம் வந்து விட்டது...”

“வெறும் கை முழம் போட முடியாது! பெரியவரிடம் இருந்து கட்டளை இல்லை. வீரர்கள் இல்லை. மாபெரும் களப்பிர அரசை எதிர்க்கப் போதிய படைக்கலங்கள் இல்லை. திட்டமிடுவது மட்டும் எப்படிச் சாத்தியமாகும்? தரையில் உள்ள பூக்களை எடுத்துக் கைகளால் தொடுப்பது போல், அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.”

“நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்! ஆனால், இப்போதுதான், இங்கே உங்கள் எதிரே அமர்ந்து பூத்தொடுப்பது எவ்வளவு சுலபமாயிருக்கிறதோ, அவ்வளவு சுலபமாகப் போர் தொடுப்பதையும் ஆக்கி வைத்திருக்கிறோம். எல்லா ஏற்பாடுகளும் இங்கு அருகருகே உள்ளன.”

“நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை இரத்தின மாலை போர் தொடுப்பது என்பது பூத்தொடுப்பதை விடப் பெரிய காரியம்.”

“பெரிய காரியம்தான்! ஆனால் சமயமும், வேளையும் பொருந்தியிருந்தால், அதுவே பூத்தொடுப்பதை விட எளிதாகிவிடும்...”

“ஆனால் சமயமும், வேளையும் இப்போது அப்படிப் பொருந்தி வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/400&oldid=946618" இலிருந்து மீள்விக்கப்பட்டது