பக்கம்:நித்திலவல்லி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

403


உனக்கு மட்டும் எவ்வாறு அப்படித் தோன்றுகிறது? குறைபாடுடைய கணிப்புக் காரணமாக நீ அப்படி நினைக்கிறாயா?”

எதிரே அமர்ந்து அவன் இப்படி வினாவிக் கொண்டிருந்த போது அவள் பூக்களைத் தொடுத்து முடித்திருந்தாள். தொடுத்து முடித்த கண்ணியைக் குடலையில் வைத்து எடுத்துக் கொண்டு புறப்படும் போது, அவனை நோக்கி நகைத்தாள் இரத்தினமாலை. அவன் கேள்விக்கு அவள் இன்னும் மறு மொழி கூறவில்லை. அவன் மேலும் அவளை வற்புறுத்திக் கேட்டான்;

“என்ன பதில் சொல்லாமலே எழுந்து போகிறாய்? வார்த்தைகளால் வினாவிய வினாவுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகி விடாது.”

“என்ன செய்வது? வார்த்தைகளை விட அதிகப் பொருளாழம் உள்ளவற்றைப் புன்னகையால் மட்டுமே கூற முடிகிறது. சற்றே பொறுத்திருங்கள்! இருட்டியதும், பதிலைச் சொற்களால் சொல்லாமல், கண் முன் காட்டியே விளக்குகிறேன்" என்று கூறினாள் இரத்தினமாலை. சிறிது நேரம் கழித்து, மாளிகையின் உணவுப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளும் மடைப்பள்ளி பணிப் பெண்களிடம், "பணிப் பெண்களே! இன்றிரவு நம் மாளிகையில் விருந்தினர்கள் இருநூற்றுவருக்கு மேல் எதிர் பார்க்கப்படுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் இங்கேயே உணவு படைக்க வேண்டியிருக்கும்” என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள் இரத்தினமாலை. இதை இளையநம்பியும் கேட்க நேர்ந்தது. அவனுக்கு இது புதிராய் இருந்தது. ஆயினும் ஏனென்று அவளைக் கேட்கவில்லை. -

அன்று மழையின் காரணமாக, விரைந்து இருட்டியது.

இருட்டி வெகு நேரமாகியும், மழை நிற்கவில்லை.

மாளிகையில் எல்லா இடங்களிலும், அந்தி விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், இரத்தினமாலை அவனைத் தேடி வந்து அழைத்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/401&oldid=946619" இலிருந்து மீள்விக்கப்பட்டது