பக்கம்:நித்திலவல்லி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

405



“இது போதாது! இன்னும் விறகுக் கட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நிறைய வர வேண்டியுள்ளது.”

“அப்படியா? பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரையைக் கண்ணகி தன் கற்பினால் எரித்ததாகச் சொல்வார்கள். இப்பொழுது இந்தக் களப்பிரக் கலியரசனின் மதுரையை நீ விறகினால் எரிக்கத் திட்டமிட்டிருக்கிறாய் போல் இருக்கிறது! அந்தக் கண்ணகியைப் போல் உனக்கும் மதுரையை எரித்துப் புகழ் பெறும் ஆசை வந்துவிட்டதா, என்ன?” என்று அவன் வினாவிய போது, இதைச் செவியுற்றுச் சிரித்தாள் அவள். உடனே அவன் அவளைக் கேட்டான்:

“பார்த்தாயா? பார்த்தாயா? மறுபடியும் புன்னகையால் பேசத் தொடங்கி விட்டாயே இரத்தின மாலை.”

“ஆமாம்! நீங்கள் வார்த்தைகளால் பேசுவது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் புன்னகையால் பேசுவது எதுவோ, அதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ள முயலக் கூட இல்லை...”

“அப்படியா? புரிந்து கொள்ள முயல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையாவது சொல்லேன்; அப்படியாவது புரிகிறதா என்று மீண்டும் முயன்று பார்க்கிறேன்...”

இதைக் கேட்டு மீண்டும் அவள் புன்னகை பூத்தாள். அவளுடைய ஒவ்வொரு புன்னகையும், அவன் வியப்பை அதிகமாக்கின. விறகுக் கட்டுகள் அடுக்கப்பட்டிருந்த பகுதியில் பசுக் கொட்டாரத்தின் விளக்கொளி படர்ந்திருந்தது. விளக்கொளியில் அவன் கண் காண அவள் ஒரு பெரிய விறகுக் கட்டின் கயிற்று முடிப்புக்களை அவிழ்த்துக் கட்டை நெகிழ்த்தி விட்டாள். என்ன அதிசயம்! நெகிழ்ந்த விறகுகளினிடையே வாள்களும், வேல்களும், பிற படைக்கலங்களும் மின்னின. உள்ளே ஆயுதங்களை வைத்துக் கட்டியிருப்பது தெரியாமல் மிகச் சாதுரியமாக அந்த விறகுக் கட்டுகள் அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. அவள் புன்னகையின் மர்மம், இளையநம்பிக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/403&oldid=946621" இலிருந்து மீள்விக்கப்பட்டது