பக்கம்:நித்திலவல்லி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“நீங்கள் சொல்கிறபடி செய்வதற்குப் போதுமான வீரர்களோ, ஏற்பாடுகளோ இப்போது களப்பிரர்களிடம் அகநகரில் இல்லை. தவிர இந்த இரு முனைகளிலும் யாத்திரீகர்கள் போல் தங்கி நம்மவர்கள் நூற்றுக்கணக்கில், நிலவறை வழிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்” என்று இரத்தினமாலையும், கொல்லனும் ஏக காலத்தில் கூறவே, இந்த ஏற்பாட்டை அவர்கள் மிகவும் திட்டமிட்டு முனைந்து செய்திருக்கிறார்கள் என்பது இளையநம்பிக்கு விளங்கியது.

“பெரியவர் எங்கே இருக்கிறார் என்பதை இப்போதாவது சொல்ல முடியுமா அப்பனே?” என்று இளையநம்பி கொல்லனை அணுகிக் கேட்டான். கொல்லன் முதலில் மெல்லச் சிரித்தான். பின்பு சில கணங்கள் கழித்து,

“பொறுத்தருள வேண்டும் ஐயா! இதை அறிவதற்கு இனிமேல் தாங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியதிருக்காது. ஒருவருக்கொருவர் மறைந்தும், மறைத்தும் வாழ நாளை உருவாக்கி வரும் பாண்டியர் பேரரசில் இடம் இருக்காது” என்றான். இந்த மறுமொழியைக் கொல்லன் தன்னிடம் கூறிக் கொண்டிருந்த போது, மறைந்தாற் போல அவனருகே ஒட்டிக் கொண்டு நின்ற குறளனின் உருவத்தை, இளையநம்பி பார்த்து விட்டான். உடனே வியப்படைந்த அவன், “அடே இந்தத் தம்பி இங்கே எப்படி வர முடிந்தது? இவன் தென்னவன் மாறனை மீட்பதற்கு, அழகன் பெருமாளுடன் சென்ற குழுவில் அல்லவா இருந்தான்?” என்று கேட்டான். உடனே, குறளன் முன்னால் வந்து நடந்ததை ஆதியோடு அந்தமாக இளையநம்பிக்குச் சொன்னான். அவன் கூறியதையெல்லாம் கேட்டு விட்டு, “நடுவூர் வசந்த மண்டபத்தில் நீங்கள் தப்பிய கரந்து படை வழியெல்லாம் இவ்வளவு நாட்களுக்குப் பின் இன்னும் உனக்கு நன்றாக நினைவிருக்கிறது அல்லவா? மறுபடி ஒரு காரியம் நேருமானால், அவற்றை நீ அடையாளம் காண்பிக்க இயலுமா?” என்று வினவினான் இளையநம்பி. சிறிதும் தயங்காமல், 'இயலும்' என்று உடனே மறுமொழி கூறினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/406&oldid=946624" இலிருந்து மீள்விக்கப்பட்டது