பக்கம்:நித்திலவல்லி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

411


அப்போது தன் தலைவனைத் துன்புறுத்துவது கொல்லனுக்குப் புரிந்தது. அவனும் எதுவுமே சொல்லத் தோன்றாமல், தலைகுனிந்து நின்றான். ஒரு பேதைப் பெண்ணின் காரணமாக, எவ்வளவு பெரிய வீரனும் நிலை குலைந்து ஏங்கி நின்று விடுகிற உணர்வைக் கொல்லன் வியந்தான். அடுத்த சில கணங்களில் கொல்லன் தன் நிதானத்துக்கு வந்தான்.

“ஐயா! முதலில் தாங்கள் அடியேனை இந்தக் கால தாமதத்துக்காகப் பொறுத்தருள வேண்டும். காராளர் தீர்த்த யாத்திரை புறப்படுவதற்கு முந்திய தினம் மாலை, இந்த ஒலைகளைத் தங்களிடம் சேர்த்து விடும்படி செல்வப் பூங்கோதை எளியேனிடம் சேர்ப்பித்திருந்ததன் காரணமாக, இதைத் தங்களிடம் இவ்வளவு நாள் கழித்துத் தர நேரிடுகிறது” என்று கூறியபடியே, அந்த ஒலைகளை எடுத்து, இளையநம்பியிடம் கொடுத்தான் கொல்லன்.

“இன்னும் சிறிது முன்பாகவே இதை நீ என்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நீ மிகக் கொடிய தாமதக்காரன்” என்றான் இளையநம்பி.

“என் தவறு இதில் எதுவும் இல்லை! கணிகை மாளிகைத் தலைவியை அருகில் வைத்துக் கொண்டு, இந்த ஒலையைத் தங்களிடம் தர விரும்பாமலே இன்று காலம் தாழ்த்தினேன்” என்று கொல்லனும் அதற்கு உரிய மறுமொழி சொன்னான். கைக்குக் கிடைத்த செல்வப் பூங்கோதையின் ஒலையைப் பிரிப்பதற்கு முன், கொல்லனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே இளையநம்பி அவனை ஒரு கேள்வி கேட்டான்:

“நான் கோநகருக்குள் வந்த நாளிலிருந்து, இங்கே இப்படி இந்தக் கணிகை மாளிகையில்தான் தங்கியிருக்கிறேன் என்பது செல்வப் பூங்கோதைக்குத் தெரியுமா?”

“தெரியுமா, தெரியாதா என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால், என் வாயினால் அதைத் தெரிய விடவில்லை என்பதற்கு மட்டுமே நான் உறுதி கூற முடியும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/409&oldid=946627" இலிருந்து மீள்விக்கப்பட்டது