பக்கம்:நித்திலவல்லி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

415



என் வரையில் நீங்கள் ஒரு சிறிதும் கருணை இல்லாதவர்! பாண்டிய மன்னர் மரபில் வந்தவர்கள், தண்ணென்ற மென்மையான இதயமுள்ளவர்கள் என்ற புகழ் வார்த்தைகள் கூறிப் போற்றுவார்கள். மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றெல்லாம் இளமையாகவும் மென்மையாகவும் ஒலிக்கும் பல சிறப்புப் பெயர்கள் பாண்டியர்களுக்கு உண்டு. முடி சூடி, அரியணை ஏறும் காலத்தில், இந்தச் சிறப்புப் பெயர்களும் குடிப் பெயர்களும் அவர்கள் இயற் பெயரோடு சேர்ந்து மணக்கும். ஆனால் இத்தனை காலமாக, என்னை நீங்கள் தவிக்க விட்டிருக்கும் கடுமைக்கும், கொடுமைக்கும் ஆளாகிய பின் நான் மட்டும் உங்களுக்கு முடி சூட்டு விழாக் காலத்துப் பெயர் மங்கலமாக, எந்தச் சிறப்புப் பெயரையாவது தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றால், ஒரு சிறிதும் தயங்காமல் உங்களைக் ‘கடுங்கோன்’ என்று அழைக்கத் தொடங்கி விடுவேன். ‘பிரியத்துக்குரிய நீயே, இப்படிச்சாபம் கொடுப்பது போல் என்னை அழைக்கலாமா?’ என்பதாக, உங்களுக்கு இந்த இடத்தைப் படிக்கும் போது, அடியாள் மேல் சினம் தோன்றலாம். என் வரையில், இளங்கோவாக நடந்து கொள்ளாத உங்களைக் கடுங்கோனாக வர்ணிப்பதே பொருந்தும் என்று நான் நினைத்தால், அதில் பிழை என்ன? எந்தப் பேரரசை மீட்பதற்காக நீங்கள் ஓர் எளிய வழிப்போக்கனைப் போல் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்தீர்களோ, அந்தப் பேரரசை மீட்கும் முதல் ஒற்றையடிப் பாதையை உங்களுக்குக் காட்ட உதவியவள் இந்தப் பேதைதான் என்பதை இதற்குள் நீங்கள் மறந்து போயிருக்க மாட்டீர்கள். அறிந்தோ, அறியாமலோ அந்த முதல் வழியை நான் காட்டினேன். சாம்ராஜ்யவாதிகளுக்கு வழிகாட்டும் ஏழைகளுக்கு வெறும் அன்பைக் கூடவா, நீங்கள் பிரதி உபகாரமாகத் தரலாகாது? என்னைப் போல் ஏழைகளும், பேதைகளும் அன்பைப் பெறுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/413&oldid=946631" இலிருந்து மீள்விக்கப்பட்டது