பக்கம்:நித்திலவல்லி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


என்பது இளையநம்பியின் மனத்தில் தெளிவாயிற்று. மங்கல நேரம் பார்த்து, நல்ல நிமித்தம் தேர்ந்து, பாட்டனார் திருக்கானப்பேரில் இருந்து, தன்னை நீண்ட நாட்களுக்கு முன்பு எதற்காக விடை கொடுத்து வழியனுப்பி வைத்தாரோ, அந்த நன்னோக்கம் நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திருக்கானப்பேர்க் காட்டில் அஞ்ஞாத வாசம் போல மறைந்து வாழும் பாட்டனாருக்கோ, பிறருக்கோ இந்தத் திருப்பங்களும், மாறுதல்களும், அதிகமாகத் தெரிந்திருக்கக் கூட முடியாது என எண்ணினான் அவன்.

இருந்தாற் போலிருந்து, வேறு ஏதோ ஞாபகம் வந்தவன் போல், "அழகன் பெருமாள் முதலியவர்களோடு களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருந்து நடுவே தப்பி வந்த அந்தக் குறளனைப் பத்திரமாக நம்மோடு இருக்கச் செய்யுங்கள். பல காரியங்களில் அவனுடைய உதவி நமக்கு வேண்டிய தாயிருக்கும்...” என்று இளையநம்பி, கொல்லனிடம் நினைவூட்டினான். வெற்றிக்குப் பின்பு நிகழ வேண்டிய, உண்டாட்டு விழாவோ, பெருஞ்சோற்றுக் கொண்டாட்டமோ முன்னதாகவே கொண்டாடப்பட்டது போல், அன்றிரவு கணிகை மாளிகையில் அந்த வீரர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தாள் இரத்தினமாலை. அன்றிரவு அவர்கள் நெடுநேரம் உறங்கவில்லை. வீரர்களின் வாள் போர்த்திறன், ஈட்டி எறிதல், வேல் எறிதல், வில்லை நாண் ஏற்றி அம்பு செலுத்துதல் ஆகியவற்றைத் தானே முன் நின்று பரிசோதித்துத் திருப்தி அடைந்தான் இளையநம்பி. அவனே ஒரு சோதனைக்காகக் கொல்லனோடு வாட்போர் செய்து, தன் திறமையையும் சோதித்துக் கொண்டான். வடக்கேயும், தெற்கேயும், படை எடுத்து வந்திருப்பவர்களோடு களப்பிரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் பாண்டிய நாட்டு மக்களின் ஆதரவோடு அரசைக் கைப்பற்றி விட முடியும் என்ற உறுதி இளையநம்பிக்கு இருந்தது. பல்லாண்டுக் காலமாகப் பாண்டிய நாட்டு மக்களை இந்த உள் நாட்டுப் போருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/418&oldid=946636" இலிருந்து மீள்விக்கப்பட்டது