பக்கம்:நித்திலவல்லி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

421


அந்தரங்கமாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் பெரியவர். தேசபக்தி என்ற மூலக் கனல் அறவே அவிந்து, பாண்டிய மக்கள் அடிமைகளாகி அடிமைத் தனத்தையே ஏற்றுக் கொண்டு விட்டதாகக் களப்பிரர்கள்தான் தப்புக் கணக்குப் போட்டிருந்தார்களே ஒழிய, அந்த மூலக் கனல் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. தொடர்ந்து, சில நாட்களாகக் கோட்டையையும், அகநகரையும் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகளைச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் அவர்கள்.

நாலைந்து நாட்கள் கழித்து, ஒர் இரவில் மீண்டும் பெரியவரிடமிருந்து, தூதுவன் ஒருவன் இவர்களைத் தேடி வந்தான். அவன் கொண்டு வந்திருந்த ஒலையும் பொருள்களும், வெற்றி நம்பிக்கையை உறுதிப்படுத்துவனவாயிருந்தன.

‘திருக்கானப்பேர் நம்பிக்கு நல்வாழ்த்துகளுடன் வரையும் ஒலை. காலம் நமக்கு இசைவாகக் கனிந்து வருகிறது. நான் அறிந்த வரையிலும், அங்கங்கே உள்ள நம் ஒற்றர்கள் சொல்லியனுப்பியிருக்கும் செய்திகளின் படியும், அடுத்த பெளர்ணமிக்குள் மதுரைக் கோட்டையில் நெடுங்காலத்திற்குப் பின் நமது மீனக் கொடியைப் பறக்க விட முடியும் என்று தெரிகிறது. கோட்டைக்குள்ளும், கோநகரிலும், உள்நாட்டின் பிற பகுதிகளிலும், அந்தப் பழைய அவிட்டநாள் விழாவின் போது இருந்த அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் களப்பிரர்களால் இப்போது செய்ய முடியவில்லையாம். எல்லா வீரர்களையும், படைபலத்தையும் அவர்கள் எல்லைகளில் குவித்து விட்டார்களாம். என்னைச் சந்திப்பதற்காக மாறோக வள நாட்டுக் கொற்கையிலிருந்து, இங்கு வந்து திரும்பிய மருதன் இளநாக நிகமத்தானும் இதையே கூறிச் சென்றிருக்கிறான். தென்திசையில், நம் காரியங்களைச் செய்யுமாறு அவனுக்குக் கட்டளை இட்டிருக்கிறேன்.

இன்னும் சில நாட்களிலேயே, தென்மேற்கே சேரர்கள் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/419&oldid=946637" இலிருந்து மீள்விக்கப்பட்டது