பக்கம்:நித்திலவல்லி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

41


நம்பியின் பார்வையில் இன்று தோன்றினாள். முதல் நாள் அந்தி மாலைப் போதாக இருந்தாலும், பெரியவரின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவரைச் சந்திக்கப் போக வேண்டிய காரிய அவசரம் இருந்தாலும் தனக்கு வழிகாட்டிய இவளுடைய அழகை அவன் ஓரளவுதான் காண முடிந்திருந்தது. இப்போதோ மேகங்களே இல்லாத நீல நெடுங்குளம் போன்ற கோல வானத்திடையில் குதிபோட்டுவரும் முழுமதியை ஒத்துத் துள்ளித் திரிந்து ஒடியாடி விருந்துக்கான காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்த இவள் அழகை அவன் முழுமையாய்க் காணவும் சிந்திக்கவும் முடிந்தது. வேறெதையும் சிந்திக்கவும் முடியாமலிருந்தது.

இளையநம்பிக்குச் சித்திரத்தவிசு இட்டு அமரச் செய்து நீர் தெளித்து இடம் செய்து குமரி வாழை இலை விரித்து அலர்ந்த மல்லிகை பூப்போல் ஆவி பறக்கும் சாலியரிசிச் சோறு படைக்கப்பட்டது. இள மாதுளம் பிஞ்சுகளை நெய்யில் வதக்கி மிளகும், உப்பும் தூவிச் சுவை சேர்த்திருந்த கறியும், நெய் அதிரசங்களும், பிற பணியாரங்களும், காலையில் மதுராபதி வித்தகர் இந்த வீட்டு உணவைப் பற்றித் தன்னிடம் வருணித்திருந்தது ஒரு சிறிதும் மிகையில்லை என்பதை அவனை உணர வைத்தன. இலையிலமர்ந்து உண்ணும் போதும் அதன் பின் கூடத்தில் அமர்ந்து காராள ரோடு உரையாடிக் கொண்டிருந்தபோதும் காலணிகளின் பரல்கள்கலின் கலின் என்று இனிய ஒலியாய்க் கொஞ்ச அந்த வீட்டில் எங்கெங்கோ மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்த நடையைத் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது அவன் மனம்.

“வண்டிகள் மூன்றும் ஆயத்தமாயிருக்கின்றன. தாமரைப் பூக்கள்தான் இன்னும் பறித்து முடியவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டுவிடலாம். உண்ட களைப்பாறச் சற்றே ஓய்வு கொள்ளலாம் அல்லவா?” என்று காராளர் இருந்தாற் போலிருந்து அவனைக் கேட்டபோது அவனுக்கு முதலில் அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதே புரியவில்லை. அவன் அவரை வினவினான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/42&oldid=715124" இலிருந்து மீள்விக்கப்பட்டது