பக்கம்:நித்திலவல்லி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


அதைப் படித்ததும், ஏதோ சிந்தனை வயப்பட்டவள் போல் நெடு நேரம் ஒன்றும் பேசாமல் அவனெதிரே அமர்ந்திருந்தாள் அவள்.

இடையிடையே அவள் நெட்டுயிர்ப்பதை இளைய நம்பி கண்டான்.

அந்த ஒலைச் செய்தி அவளுக்கு ஏன் மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அவளைக் கேட்டான்:

“கோட்டையில் மீண்டும் நமது கொடி பறக்கப் போகிறது என்னும் செய்தி, உனக்கு ஏன் மகிழ்ச்சியை அளிக்கவில்லை இரத்தினமாலை?”

“.............”

அவளிடமிருந்து இதற்கு மறுமொழி இல்லை. அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் பார்த்தான். அவள் செவ்விதழ்கள் துடித்தன.

எதைக் கூறுவதற்கு அவை அப்படித் துடிக்கின்றன என்பதையும், அவனால் உடனே விளங்கிக் கொள்ள முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்து கேட்கும் சோகம் நிறைந்த ஓர் இன்னிசையைப் போல் மெல்லிய விசும்பல் ஒலியும், விரைந்து மூச்சு விடும் உயிர்ப்புக்களும் அவள் பக்கமிருந்து அவன் செவிகளில் விழுந்தன. மிகமிகத் திடமானவள் என்றும், ஓரளவு ஆணின் உறுதியுள்ளவள் என்றும் அவன் நினைத்திருந்த இரத்தினமாலை இப்படிப் பேதையாக நெகிழ்ந்ததைக் காணப் பொறுக்காமல் அவன் பதறிப்போனான்.

தன் சொற்களோ, பெரியவரின் அந்த ஒலையிலுள்ள சொற்களோ, அவளை எந்த விதத்தில் வருத்தியிருக்க முடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஓர் இதயம் கரைந்து பொங்குவது போன்ற அந்த இனிய விசும்பல், மெல்லிய இசையாக அவன் செவிகளில் நுழைந்து இதயத்தில் பதிந்து வேதனை செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/422&oldid=946640" இலிருந்து மீள்விக்கப்பட்டது