பக்கம்:நித்திலவல்லி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


8. புதிய நிபந்தனை

நீண்ட நேரம் வரை அந்த நிலையில், இரத்தின மாலையிடம் அவன் என்ன பேசினாலும் மறு மொழி கிடைக்கவில்லை. அவன் ஏதாவது வினாவினால், அந்த வினாவைக் கேட்டு அவள் விசும்பல் இன்னும் அதிகமாகியது. அழுகை பெருகியது. கடைசியில் அவளைப் பேச வைக்க அவன் ஒரளவு கடுமையான வார்த்தைகளைக் கூறி வினாவ வேண்டியதாகி விட்டது.

“இரத்தினமாலை! பெண்களைப் பற்றிய ஒரு பேருண்மை இன்றுதான் எனக்குப் புரிகிறது! தங்களால் அன்பு செய்யப்படுகிற ஆடவனுக்கு நல்ல காலம் வரும் போது கூட, அதற்கும் மகிழாமல் அழுவதற்குத் துணிகிற கொடுமையான உள்ளம் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் போலும்.”

“பேதைகளின் உள்ளங்களைக் கோட்டை கொத்தளங்களை மீட்டுக் கொடியேற்றச் செல்லும் மாமன்னர்கள் ஞாபகம் வைத்திருக்கக் கூட முடியாது ஐயா! அரசர்களின் உலகில், இதயங்களை விடக் கோட்டை கொத்தளங்கள் பெரியதாகி விடலாம். ஏற்கெனவே வெற்றி கண்ட ஒரு மனத்தை, நாளை வெல்லப் போகும் ஒரு கோட்டையின் வெற்றி-ஞாபகத்தில், அவர்கள் மிக எளிதாக மறந்து போய் விடுவார்கள். அவர்களை நம்பி, வலுவில் முன் வந்து அன்பினால் தோற்றவர்களை வென்றதாகக் கூட அவர்களுக்கு நினைவு இருக்காது...”

“களப்பிரர்களோடு நான் இன்னும் போரைத் தொடங்கவே இல்லை! அதற்குள்ளேயே நீ உன்னோடு என்னைப் போருக்கு இழுக்கிறாய்! இதுவும் என் தீவினை என்றுதான் சொல்ல வேண்டும்.”

“நீங்கள் புரியும் வாதம் பிழையானது! உங்களுக்கு முன் மனப்பூர்வமாகத் தோற்று நிற்பவர்கள், உங்களிடமே தொடங்குவதற்குப் போர் எதுவும் இருக்க முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/423&oldid=946641" இலிருந்து மீள்விக்கப்பட்டது