பக்கம்:நித்திலவல்லி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


“பின் என்ன? இல்லாமலா தொடங்குகிறாய் நீ?”

“நான் எதையும் புதிதாகத் தொடங்கவில்லை. ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் கண் கலங்குகிறேன்...”

“மனப்பூர்வமாகத் தொடங்கும் எதற்கும் முடிவே இல்லை இரத்தினமாலை! அதை முடியவும் விடக் கூடாது...”

“பதவிகளும், சுகபோகமும், ஏற்றத் தாழ்வும் உங்களுக்கும் எனக்கும் குறுக்கே மலைகளாக நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள்...”

“உண்மை! அவை உன் உடலுக்கும், என் உடலுக்கும் குறுக்கே நிற்கலாம். இதயங்களுக்கு நடுவே எதுவும் குறுக்கே நிற்க முடியுமா?”

“பல திங்கள் காலம் உங்களை அன்போடு உபசரிக்கும் பேறு பெற்றதற்காக நான் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.”

“நீ மட்டுமில்லை! நானும்தான்...”

“ஆனால், இப்போது நாம் பிரியும் நாட்கள் நெருங்குகின்றன என்பதை எண்ணும் போது என்னால் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தவிப்பதை உங்களால் உணர முடியவில்லையா?”

“உணராமல் இருப்பதற்கு நானோ, என் இதயமோ குருடாகி விடவில்லை. நீ அணிந்த மலர் மாலைகளைத் தாங்கிய தோள்கள், இனி அரச பாரத்தைத் தாங்கப் போகின்றன. என்னுடைய புதிய சுமையை, நீ கவலையோடும் அநுதாபத்தோடும் நோக்க வேண்டும். இந்த மாளிகையில் அடைபட்டுக் கிடந்த காலத்தில், ஒர் அரச குடும்பத்து இளைஞனுக்கு நீ அளித்த மகிழ்ச்சிகளை இனிமேல் அரியணையில் அமர்ந்திருக்கும் போதோ, போர்க்களங்களில் ஊடாடும் போதோ அவன் அடைய முடியாது...”

“என் போல் திருவடித் தொண்டு செய்யும் கணிகைகள், உங்களோடு அரியணையில் ஏறிக் கொலு அமர அரச குலத்து நியாயங்கள் இடம் தர மாட்டா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/424&oldid=946642" இலிருந்து மீள்விக்கப்பட்டது