பக்கம்:நித்திலவல்லி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



பெரியவரின் தூதன் வந்து தென்மேற்குத் திசையில் சேரர்களும் படையெடுத்து வந்து, பாண்டிய நாட்டு எல்லையில் களப்பிரர்களைத் தாக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்து விட்டுச் சென்றான்.

அகநகரையும் கோட்டையையும், இளையநம்பி கைப்பற்றுவதற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. கொற்கை மருதன் இளநாக நிகமத்தானின் உதவியால் அங்கங்கே இருந்த பாண்டிய வீரர்களுக்குப் போதுமான புதிய குதிரைகள் வந்து சேர்ந்திருந்தன.

இதற்கு இடையே கொல்லனும், இளையநம்பியும் கணிகை மாளிகையின் கீழே நிலவறையில் தனியே சந்தித்துக் கொள்ளக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தின் போது, “நான் இங்கே மிகவும் சுகமான உபசரிப்புகளோடு நல்லதொரு பெருமாளிகையில் கவலையின்றி இருக்கிறேன் என்பது போன்ற கருத்துப்படக் காராளர் மகளிடம் கூறியிருக்கக் கூடாது. அது வீணாக அவள் மனத்தில் இல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கியிருக்கிறது என்பதையே அவள் ஒலை காட்டுகிறது” என்று கொல்லனைக் கடிந்து கொண்டான் இளையநம்பி.

“ஐயா! நான் அப்படிக் கூறா விட்டாலும், அகநகரில் நீங்கள் மிக மிகத் துன்பப்படுவதாக எண்ணி அவள் தவிக்க நேரிட்டு விடும். குறிப்பிட்டு எதையும் கூறாமல் பொதுவாகவே, நான் அதைச் சொல்லி விட்டு வந்தேன்” என்று மறுமொழி கூறினான் கொல்லன்.

நான்காம் நாள் பெரியவரிடம் இருந்து வந்த தூதன் கொண்டு வந்திருந்த கட்டளை ஓலையில் இளையநம்பி முதலியவர்கள் நிலவறை வழியே கோட்டையைக் கைப்பற்றிக் கொடியேற்றுவதற்குப் புறப்பட வேண்டிய நாள், நேரம், செயற்பட வேண்டிய முறைகள், உபாயங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தார் பெரியவர். ஓலையின் முடிவிலே ஒரு புதிய செய்தியும் இருந்தது. அதை ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்துப் புரிந்து கொள்ள முயன்றான் இளையநம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/428&oldid=946646" இலிருந்து மீள்விக்கப்பட்டது