பக்கம்:நித்திலவல்லி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

433


ஆடுவதை நிறுத்தி விட்டு, "இப்போது நீ பாடியதை எனக்காக இன்னொரு முறை பாடு அம்மா!" என்று குழைந்த குரலில் ஆவலோடு தாயைக் கேட்டாள். மகளின் வேண்டுகோளுக்காகத் தாய் மீண்டும் அந்த அடிகளைப் பாடினாள். உடனே மகள் குறுக்கிட்டுக் கேட்கலானாள்:-

“உன் பாடலில் பொருட்பிழை, இலக்கணப் பிழை, காலவழு எல்லாமே குறைவின்றி நிறைந்திருக்கின்றன அம்மா! இந்தக் கணம் வரை நாம் களப்பிரர்களின் ஆட்சியில்தான் இருக்கிறோம். நீ பாடலில் பாடியிருப்பது போல் திருக்கானப் பேர் நம்பி இன்னும் களப்பிரர்களை வெல்லவும் இல்லை. கொல்லவும் இல்லை.”

“இப்படிப் பாடுவதுதான் அம்மானையில் வழக்கம் மகளே! மிகைப்படுத்திப் பாடுவதும், விரைவில் நிகழ இருப்பதை, இப்போதே நிகழ்ந்து விட்டது போல் பாடுவதும் எல்லாம் அம்மானை விளையாடும் போது இயல்பாக நடப்பதுதான்...”

“நீ ஆசைப்படுவது எல்லாம், நீ ஆசைப்படுகிறாய் என்பதற்காகவே நடந்து விடுமா அம்மா?”

“நான் ஆசைப்படுவது மட்டுமில்லையடீ, பெண்ணே! நீ உன் அந்தரங்கம் நிறைய ஆசைப்படுவது எதுவோ, அதைப் புரிந்து கொண்டு உன் திருப்திக்காகவே இப்படிப் பாடினேன்! நீயோ, என்னிடம் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாய்...”

நேருக்கு நேர் தாய் இவ்வாறு கூறியதும், செல்வப் பூங்கோதை கையும் களவுமாகப் பிடிப்பட்டுவிட்ட உணர்வோடு நாணித் தலை கவிழ்ந்தாள். தன் அந்தரங்கத்தை மிக மிகத் தந்திரமாகத் தாய் கண்டு பிடித்து விட்டாளே என்று கூசினாள் அவள்.

நீண்ட நேரமாகப் பெண் குனிந்த தலை நிமிராமல் இருக்கவே, “விளையாட்டைத் தொடரலாம் வா” என்று அவள் மோவாயைத் தொட்டு முகத்தை நிமிர்த்திய தாய் திகைத்தாள். மகளின் நீண்ட அழகிய மீன்விழிகளில் நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/431&oldid=946649" இலிருந்து மீள்விக்கப்பட்டது