பக்கம்:நித்திலவல்லி.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


மல்கியிருந்தது. அது ஆனந்தக் கண்ணீரா, துயரக் கண்ணீரா என்று புரிந்து கொள்ள முடியாமல் மலைத்தாள் தாய். மகளைத் தழுவியபடி, “எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய் மகளே! நீ மகிழ வேண்டும் என்பதற்காக நான் இட்டுக் கட்டி இயற்றிய பாடலைக் கேட்டு, நீயே அழுதால் என்ன செய்வது? கவலையை விட்டு விடு! முகமலர்ந்து சிரித்தபடி என்னைப் பார். உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும். அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்று ஆறுதலாகச் சொன்னாள் தாய்.

“உனக்குத் தெரியாதம்மா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறதி அதிகம். அவர்கள் தங்களை நினைத்துத் தவிக்கும் பேதைகளை எளிதாக மறந்து விடுவார்கள். இதிகாச காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்திருக்கிறது. சகுந்தலையின் கதை என்ன? தன்னை மறந்து போய்விட்ட ஓர் அரசனை மறக்க முடியாமல் அவள் எவ்வளவு தவித்தாள்?”

“நீ அப்படித் தவிப்பதற்கு அவசியம் நேராது மகளே! உன் தந்தை உன்னை அழ விட மாட்டார்.”

தாய் இப்படிக் கூறிய போது, அவளை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கக் கூசியவளாக மகள், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு கேட்டாள்:

“அம்மா! நாம் நிலங்களை ஆளும் வேளாளர் குடியினர். மாபெரும் பாண்டியப் பேரரசை, நம் விருப்பப்படி இசைய வைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டுப் பேசாதே. ஏதோ சிரம தசையில் இருந்த போது ஒர் அரச குடும்பத்து வாலிபருக்கு, நாம் வழி காட்டி உதவினோம். நம் மாளிகையில் விருந்திட்டோம். நமது சித்திர வண்டியில் ஆயிரம் தாமரைப் பூக்களால் மூடி மறைத்து அகநகரில் கொண்டு போய் விட்டோம். இந்த உதவிகளுக்கு இவற்றை விடப் பெரிய மாற்று உதவியை அவர்களிடமிருந்து நீ எதிர்பார்க்க முடியுமா அம்மா?”

“முடியும்! நீ நினைப்பது போல் நாம் அரச குடும்பத்தோடு தொடர்பற்றவர்கள் இல்லை. பல தலைமுறைகளுக்கு முன் களப்பிரர் ஆட்சி வராத நற்காலத்தில் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/432&oldid=946650" இலிருந்து மீள்விக்கப்பட்டது