பக்கம்:நித்திலவல்லி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

435


குடும்பத்தில் பாண்டிய இளவரசர்கள் பெண் எடுத்திருக்கிறார்கள், மணந்திருக்கிறார்கள் என்றெல்லாம் வரலாறு உண்டு. தவிர, உன் தந்தைக்கு இந்தப் பாண்டியப் பேரரசும், பெரியவர் மதுராபதி வித்தகரும் மிக மிகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உன் தந்தை அறக் கோட்டங்கள் என்றும், ஊட்டுப்பிறை என்றும் பெயர் சூட்டிப் பல இடங்களில், முனை எதிர் மோகர் படையினரையும், ஆபத்துதவிகளையும் நெடுங் காலமாகப் பேணி வளர்த்தவர். அவர் இட்ட செஞ்சோற்று உதவியால்தான், நாளைக்குப் பாண்டிப் பேரரசே களப்பிரர்களிடம் இருந்து மீளப் போகிறது. அந்தச் செஞ்சோற்றுக் கடனைத் திருக்கானப்பேர் நம்பி மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாது.”

தாய் கூறிய ஒரு வரலாறு, செல்வப் பூங்கோதையின் வயிற்றில் பால் வார்த்தது. ‘பல தலைமுறைகளுக்கு முன் பாண்டிய அரச மரபினர், இந்தக் குடும்பத்தின் முன்னோர்களிடம் பெண் எடுத்து மணந்திருக்கிறார்கள்’ என்று அவள் கூறிய சமயத்தில், செல்வப் பூங்கோதை மகிழச்சியால் மனம் பூரித்தாள். திருக்கானப்பேர் நம்பிக்கும் தனக்கும் நடுவே முறைகள், வரம்புகள் என்ற பெயரில் எதுவும் குறுக்கே நிற்க முடியாதென்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. செஞ்சோற்றுக் கடனையும், காதலையும் தொடர்புபடுத்தி வாக்குறுதி கேட்கும் காரியத்தைத் தன் தந்தை ஒரு போதும் செய்ய மாட்டார் என்பதை அவள் அறிவாள். தந்தையை வற்புறுத்தித் தன் தாயே பிடிவாதம் செய்தாலும், பெரியவரையோ, இளைய நம்பியையோ வற்புறுத்துவதற்குத் தந்தையின் பெருந்தன்மை நிறைந்த உள்ளம் இசையாது என்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். ஆனால் தாய் என்னவோ, “கவலைப்படாதே மகளே, நானாயிற்று!” -என்பது போல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். தாய் கூறியதை, அவளால் நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதில் ஐயப்பாடு இருந்தாலும், தாய் ஒருத்தியாவது தன் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே என்பது ஆறுதலாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/433&oldid=946651" இலிருந்து மீள்விக்கப்பட்டது