பக்கம்:நித்திலவல்லி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

437


நல்லுள்ளம் புரியாமல் 'தாய் தன்மேல் சந்தேகப்படுவதாக' இளையநம்பிக்குக் கொல்லன் மூலம் எழுதியனுப்பிய ஒலையில், தானே தவறாகக் குறிப்பிட்டு விட்டதை எண்ணி அவள் மனம் கூசியது. மகள் என்ற முறையோடும், அன்பு உரிமையோடும் தாய் தன்னை இடை விடாமல் பேணிக் கவனிப்பதையே, அவள் தன் மேல் சந்தேகப்பட்டுக் கண்காணிக்கிறாளோ என்பதாகத் தான் கருதி அஞ்சியது எவ்வளவு பெரிய பேதைமை என்று இப்போது உணர்ந்தாள் செல்வப்பூங்கோதை, தாயின் அன்பும், ஆதரவும், ‘மகளே உன் தந்தையும் நானும் உன்னைத் தவிக்க விட மாட்டோம்’ என்ற உறுதிமொழியும் வெளிப்படையாகக் கிடைத்த பின், அன்று செல்வப் பூங்கோதை மிக மிக உற்சாகமாயிருந்தாள். நீண்ட காலத்துக்குப் பின் அவள் இதழ்கள் தெரிந்தவையும், அறிந்தவையும் ஆகிய பாடல்களை முறித்தும், முறியாமலும் மகிழ்ச்சியோடு இசைத்தன. புறங்கடையில், தோட்டத்தில் போய்க் காரணமின்றி மழையில் நனைந்தபடியே உலாவினாள் அவள். மாளிகைக்குள் திரும்பி ஆடி[1]யில் முகம் பார்த்து மகிழ்ந்தாள். தாயைக் கூப்பிட்டுக் குழல் நீவி, எண்ணெய் பூசி, வாரிப் பூ முடித்து விடச் சொன்னாள். நெற்றியில் திலகமிட்டு அழகு பார்த்துக் கொண்டாள். புதுக் கூறையுடுத்திப் புனைந்து கொண்டாள். இடையிடையே தீர்த்த யாத்திரைக்கு முந்திய நாளன்று, ‘சாம்ராஜ்யாதிபதிகளுக்கு வழி காட்டும் பேதைகளுக்கு அவர்கள் அன்பைக் கூடவா பிரதியுபகாரமாகத் தரக் கூடாது?’ என்று திருமோகூர்க் கொல்லனிடம், தான் கொடுத்தனுப்பியிருந்த ஒலையில் இளையநம்பியைக் கேட்டிருந்த கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னுடைய அந்தக் கேள்வியைக் கண்டு அவர் என்ன நினைப்பார்?-என்றும் இப்போது அவள் சிந்தித்தாள்.

“பெண்ணே அம்மானை விளையாடி முடித்ததிலிருந்தே, இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். நெடுநாளைக்குப் பின்பு இன்றுதான் உன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன். ஊரில் பெய்யும் புது மழையைப் போல் உன்



  1. கண்ணாடிக்கு அக்காலப் பெயர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/435&oldid=946656" இலிருந்து மீள்விக்கப்பட்டது