பக்கம்:நித்திலவல்லி.pdf/437

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
439
 

வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த கொல்லனை உடனே தன்னைச் சந்திக்க வருமாறு, கணிகை மாளிகையின் மேற்பகுதிக்குக் கூப்பிட்டு அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் வருவதற்குள் ஒலைகளை எடுத்து, எழுத்தாணியால் ஏதோ அவற்றில் எழுதத் தொடங்கினான். சிறிது நேரங் கழித்து எழுதுவதை நிறுத்திக் கொண்டு, ஏதோ, நினைவுக்கு வந்தவன் போல், திருமோகூரிலிருந்து காராளர் மகள் செல்வப்பூங்கோதை அனுப்பியிருந்த, பழைய ஓலைகளை எடுத்து மீண்டும் படிக்கலானான். படித்துவிட்டுத் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். சில கணங்களில் சிரிப்பு மெல்ல மெல்ல அவன் முகத்திலிருந்து மறைந்தது. முகத்தில் துயரம் தெரிய, வேதனையோடு நெட்டுயிர்க்கத் தொடங்கினான். அவன் துயரமும், மகிழ்ச்சியும் மாறி, மாறி நிலவிட அவன் மனத்திற்குள், ஏதோ ஒரு போராட்டம் நிகழத் தொடங்கியிருந்தது. எழுதுவதற்கு எடுத்த ஒலைகளில், மீண்டும் அவன் எழுதத் தொடங்கிய போது யாரோ மிக அருகில் நடந்து வரும் காலடியோசை கேட்டது. நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்காமலே, வருவது கொல்லன் இல்லை என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. காலடி ஓசையை முந்திக் கொண்டு வரும் நறுமணங்களும், கை வளைகள், காற்சிலம்புகள் ஆகியவற்றின் இங்கித நாதங்களும் இரத்தினமாலைதான் தன்னருகே வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனை உணரச் செய்தன.

உடனே அவன் முன்னெச்சரிக்கையும், விழிப்பும் அடைந்தவனாகச் செல்வப்பூங்கோதையிடமிருந்து தனக்கு வந்திருந்த ஒலைகளையும், அப்போது செல்வப்பூங்கோதைக்குக் கொடுத்தனுப்புவதற்காகத் தான் வரைந்து கொண்டிருந்த ஓலையையும், எழுத்தாணியையும் எல்லாவற்றையும் சேர்த்து விரைந்து மேலாடையால் போர்த்தி மறைக்க முயன்றான்.

இன்னிசையாய்க் கலீரென்ற சிரிப்பொலி அவன் செவிகளை நிறைத்தது. அவன் முயற்சியை இரத்தினமாலை கவனித்துவிட்டாள் என்பதற்கு இந்தச் சிரிப்பொலி