பக்கம்:நித்திலவல்லி.pdf/439

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
441
 


எடுத்துப் படித்திருப்பதற்காகத் தாங்கள் இந்தப் பேதையை முதலில் மன்னிக்க வேண்டும்.”

“அப்படியானால் அதை ஏன் என்னிடம் நீ மறைத்தாய்?”

“மறைத்ததற்குக் காரணம் உண்டு. என்னால், தாங்கள் சலனமோ, மனக்கிலேசமோ அடைந்து, ஒரு பாவமும் அறியாத அந்தப் பேதை செல்வப்பூங்கோதையிடம் வேறுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நான் இவற்றை அறிந்ததை உங்களிடம் காண்பித்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால், இவற்றை அறிந்த பின்பே, என் நிலையை அவளோடு ஒப்பிட்டுச் சிந்தித்துக் கொண்டுதான் அன்று நான் உங்களிடம், 'ஏற்கெனவே மனப்பூர்வமாகத் தொடங்கியது எதுவோ, அது முடியப் போகிறதே என்றுதான் நான் கண் கலங்குகிறேன். புதிதாக எதையும் தொடங்கவில்லை’ என்று கண்ணீர் சிந்திக் கதறினேன். நீங்கள் உறுதி கூறிய பின்பு, அடுத்த பிறவி வரை காத்திருப்பதாக வாக்களித்தேன். என் தியாகத்தை நான் இந்தச் செல்வப்பூங்கோதையின் நலனுக்காகவே செய்தேன் என்பதைக் கூட, அன்று நான் உங்களிடம் கூறவில்லை. காரணம் அவ்வளவு ஏமாற்றங்களையும், நிராசைகளையும் தாங்கிக் கொள்ளும் மனோதிடமும், உறுதியும் அந்தத் திருமோகூர்ப் பெண்ணுக்கு இருக்கும் என்று அவள் எழுதிய ஒலைகளிலிருந்து தெரியவில்லை. அவளுடைய உரிமை முதன்மையானது. உங்களைப் போன்றதொரு சாம்ராஜ்யாதிபதிக்கு அந்த அரசை நோக்கிச் செல்லும் முதல் ஒற்றையடிப் பாதையையே அவள் காட்டியிருக்கிறாள். அவள் என்னை விடப் பாக்கியசாலி. என்னை விடக் கொடுத்து வைத்தவள். என்னை விட உங்களை, உலகறிய மணப்பதற்கு ஏற்ற குடிப் பிறப்பு உள்ளவள். நானோ அரச தந்திரங்களோடும், அரசியல் சூழ்ச்சிகளோடும் பழகிப் பழகி மனம் மரத்துப் போனவள். பெரிய ஏமாற்றங்களைக் கூட என்னால் எளிதாகத் தாங்கிக் கொண்டு விட முடியும். அவளால் அது முடியாது... முடியும் என்று தோன்றவும் இல்லை...”

பேசிக் கொண்டே வந்தவள் பேச்சுத் தடைப்பட்டு இருந்தாற் போல் இருந்து சிறு குழந்தைபோல் விசும்பி விசும்பி