பக்கம்:நித்திலவல்லி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

443


பெருமாள் இரத்தினமாலையின் குணச் சிறப்பை வியந்து புகழ்ந்ததும், இப்போது இளையநம்பிக்கு நினைவு வந்தன. பெரியவர் மதுராபதி வித்தகர் போன்ற பெரிய ஞானியின் ஆசி மொழியை இரத்தினமாலை எப்படி அடைந்திருக்க முடியும் என்பது இப்போது அவனுக்கு மிக மிக எளிதாகவே புரிந்தது. அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உடல் புல்லரித்தது.

இரத்தினமாலை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் புன்னகை பூத்தபடி நின்றிருந்தாள்.

“ஒலையை எழுதி முடித்துச் செல்வப் பூங்கோதைக்கு அனுப்புங்கள் ஐயா! உங்கள் தனிமைக்கு இப்போது இங்கே நான் இடையூறாக இருக்க விரும்பவில்லை” என்று சிரித்தபடியே கூறி விட்டு உட்புறம் சென்று மறைந்தாள் அவள்.

நெடுநேரம் திகைத்திருந்து விட்டுப் பின், ஒருவாறு ஒலையை எழுதி முடித்தான் இளையநம்பி. அதற்குள் கொல்லனும் கூப்பிட்டனுப்பிய கட்டளையை ஏற்று, நிலவறையிலிருந்து வந்திருந்தான்.

“நாளை இரவு நாம் கோட்டைக்குள் புகுந்து, ஆட்சியைக் கைப்பற்றி நமது மீனக்கொடியை மீண்டும் மதுரை மாநகரில் பறக்கச் செய்யப் போகிறோம். அதற்குள் நீ திருமோகூர் சென்று இந்த ஒலையை எனக்காகக் காராளர் மகளிடம் சேர்த்து விட முடியுமா?” என்று இளையநம்பி அவனைக் கேட்டான். உடனே அதைச் செய்ய இணங்கி, ஒலையை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் கொல்லன். ‘விரைந்து மீண்டும் நிலவறைக்குத் திரும்பி வந்துவிட வேண்டும்’ என்பதை அவனிடம் ஒரு முறைக்கு இரு முறையாக வற்புறுத்திய பின், அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் இளையநம்பி. கொல்லன் திருமோகூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தன்று, அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், எதிர்பாராத விதமாகத் திருமால் குன்றத்திலிருந்து காராளரும், அவரோடு இளையநம்பிக்குப் புதியவனாகிய இன்னோர் இளைஞனும் நிலவறை வழியே கணிகை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/441&oldid=946662" இலிருந்து மீள்விக்கப்பட்டது