பக்கம்:நித்திலவல்லி.pdf/442

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.


11. இரத்தினமாலையின் முத்துமாலை

நீண்ட நாட்களுக்குப் பின்பு காராளரைச் சந்தித்ததும் ஏற்பட்ட வியப்பில், அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ செய்திகள் இருந்தும், இளையநம்பியால் சில கணங்கள் எதுவும் பேச முடியவில்லை. தவிரவும், காராளரோடு வந்திருந்த புதிய இளைஞன் வேறு உடன் இருந்ததால், இளையநம்பி அவரிடம் மனம் விட்டுப் பேசவும் இயலவில்லை. ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ள முடிந்த அளவில் உரையாடல் நின்று போயிற்று. அப்போது காராளரே முன் வந்து, “பெரியவர் தங்களிடம் இந்த ஒலையைச் சேர்த்து விடச் சொல்லிக் கொடுத்தனுப்பினார்” என்று ஓர் ஒலையை எடுத்து இளைய நம்பியிடம் அளித்திருந்தார். பிடரியிலும், காதோரங்களிலும் சுருண்டு வளர்ந்திருந்த முடியுடனும், பெண்மை முகச் சாயலுடனும், காராளரின் அருகே நின்று கொண்டிருக்கும் இந்தப் புதிய இளைஞனைப் பற்றிப் பெரியவர் அந்த ஒலையில் ஏதாவது எழுதியிருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தபடியே அதை முத்திரை நீக்கிப் பிரித்தான் இளையநம்பி. அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தச் செய்திகள் அதில் இருந்தன.

“... மங்கல நல்வாழ்த்துகளுடனும் நற்பேறுகளுடனும் இளையநம்பி காண்பதற்கு விடுக்கும் ஒலை. இந்த ஒலைதான் திருமால் குன்றத்திலிருந்து நான் உனக்கு விடுக்கும் இறுதி ஒலையாக இருக்கும். என் இடத்தை இனி நீ அறிவதால் அபாயமில்லை. இதற்குப் பின்னால் இப்படி மறைந்திருந்து யாரும் அறியாமல் உனக்கு ஒலையனுப்பவும், கட்டளைகளை இடவும், உபாயங்களைச் சொல்லிக் கொடுக்கவும் அவசியம் இராது. விரைவில் மதுரை மாநகரத்து அரியணையில் புகழ்