பக்கம்:நித்திலவல்லி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

445



பெற்ற பாண்டியர் வெண் கொற்றக் குடையின் கீழ், நீ வெளிப்படையாக அரசு வீற்றிருப்பாய். களப்பிரர் ஆட்சியால் வீழ்ச்சியடைந்து விட்ட நமது சமயமும், மொழியும், கலைகளும், நாகரிகமும் மீண்டும் வளரும். நீ அவற்றை வளரச் செய்வாய் என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு. நாளை நள்ளிரவு நடு யாமத்திற்குப் பின்னர் களப்பிரக் கருநாடவேந்தன் கலியரசனின்[1] ஆட்சி பாண்டிய நாட்டில் இருக்க முடியாது.

நாளை நள்ளிரவிற் கோட்டையைக் கைப்பற்று முன் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி, இந்த ஒலையில் உனக்கு நான் தெரிவிக்கப்போகிறேன். இதிற் கண்ட கட்டளைகளை அணுவளவும் பிழையாமல் நிறைவேற்ற வேண்டியது உன் கடமை. இந்தக் கடமையை நீ செம்மையாக நிறைவேற்றுகையில், உனக்கு உறுதுணையாய் இருப்பதற்காகவே, காராளரையும் அனுப்பி இருக்கிறேன். காராளரோடு வந்திருக்கும் புதிய இளைஞன் யார் என்ற கேள்வி இப்போது உன் மனதில் எழலாம். நீ திருக்கானப் பேர்க்காட்டிலிருந்து முதன்முதலாக என்னைச் சந்திக்கத் திருமோகூருக்கு வந்த மறுநாள் காலையில், ‘களப்பிரர்கள் சந்தேகப்பட்டுக் கொன்றுவிட்ட இருவரைத் தவிரப் பாண்டிய அரச வம்சத்தில் நீ உட்பட இன்னும் மூவர் எஞ்சியிருக்கிறீர்கள்’ என்று நான் உன்னிடம் கூறினேன். உடனே நீ என்னிடம் அந்த மூவரில் உன்னொருவனைத் தவிர, ‘மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’ என்று கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

'இப்போது நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை தம்பீ. நீங்கள் மூவரும் சந்தித்துக் கொள்ள ஒரு சமயம் வரும். அப்போது பார்க்கலாம்' என்று அன்று, அந்த அதிகாலை வேளையில் உனக்கு நான் மறுமொழி கூறியிருந்தேன். தீவினையோ அல்லது நமது துர்ப்பாக்கியமோ தெரியவில்லை; அதில் ஒருவனை நீ சந்திக்க முடியாமலே போய் விட்டது. களப்பிரர்கள் அவனைக் கழுவேற்றிக்


  1. ஆதாரம்- வேள்விக்குடிச் செப்பேடுகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/443&oldid=946664" இலிருந்து மீள்விக்கப்பட்டது