பக்கம்:நித்திலவல்லி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

449


கவலையாக இருக்கிறது. இவனோ பொறுப்பில்லாதவனாகத் தெரிகிறான். மன உறுதியும் போதாது போலிருக்கிறதே?"

“உண்மைதான்! ஆனால், பெரியவருக்கும் இவனைப் பற்றி நன்கு தெரியும்: தெரிந்திருந்தும், அந்தப் படையணிக்கு இவனைத் தலைவனாக அவர் நியமித்திருக்கிறார் என்றால், அதில் வேறு ஏதாவது நுணுக்கமான காரணம் இருக்கும். அவர் கட்டளைப்படியே செய்து விடுவதுதான் நமக்கு நல்லது...” என்றார் காராளர். பெருஞ்சித்திரனைக் கண்டு மிகமிக வேதனையும், ஏமாற்றமும் அடைந்திருந்தான் இளையநம்பி. புகழ் மிக்க பாண்டிய மரபில் வந்தவனாகவே நம்ப முடியாதபடி விடலைத் தனமாகவும், விட்டேற்றியாகவும் தோன்றினான் அவன். ஒடுக்கப்பட்டுவிட்ட ஓர் அரச குடும்பத்து இளைஞனுக்கு இந்த இளம் பருவத்தில், தான் இழந்த நாட்டை மீட்பதில் எவ்வளவு ஆவலும், சுறுசுறுப்பும் இருக்க வேண்டுமோ, அதில் ஒரு சிறிதும் பெருஞ்சித்திரனிடம் இல்லை என்பது இளையநம்பிக்குப் புரிந்தது.

‘தென்னவன் மாறனின் இயல்பு இவனுக்கு நேர் மாறானது ஐயா! சீறிப் பாயும் பதினாறடி வேங்கை போன்ற கனலும் தோற்றமும், எதிரிகள் பெயரைக் கேட்டாலே பொங்கி எழும் வீரமும் தென்னவன் மாறனுடையவை. இந்தப் போரில் தென்னவன் மாறன் இருந்திருக்க வேண்டும் ஐயா’ என்று கொலையுண்ட பாண்டிய குல மகா வீரனும் இளையநம்பிக்குத் தமையன் முறையுடையவனும் ஆகிய தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டினார் காராளர். களப்பிரர்களால் சிறை செய்யப்பட்டுக் கொலையுண்ட தன் தமையனைப் பற்றி அவர் நினைவூட்டவே, ஓரிரு கணங்கள். ஒன்றும் பேசத் தோன்றாமல், அப்படியே கண் கலங்கிப் போய் இருந்து விட்டான் இளையநம்பி. அவன் அடைந்த வேதனையைக் கண்டு தென்னவன் மாறனைப் பற்றி நினைவூட்டியதன் மூலம், அப்போது அவன் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கச் செய்து விட்டோமோ என்று காராளருக்குக் கூட வருத்தமாக இருந்தது. அவனைத் தனிமையில் இருக்க விட்டு விட்டு, இரத்தினமாலையைத் தேடி அவளிடம் பேசுவதற்குச் சென்றார் காராளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/447&oldid=946670" இலிருந்து மீள்விக்கப்பட்டது