பக்கம்:நித்திலவல்லி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

458

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


நிறைந்தது. களஞ்சியங்கள் இருந்த கூடாரத்தையும் கடந்து, அவள் முன் வாயிற்புறத்திற்கு வந்து பார்த்த போது, அங்கே இருளோடு இருளாக இருவர் நின்றிருந்தனர். அவர்கள் இருவருமே விளக்கொளியில் நேருக்கு நேர் முன் வந்து நிற்கத் தயங்குவதாகத் தோன்றியது. முதலில் அஞ்சினாலும், பின்பு துணிவடைந்தாள் அவள்.

“யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"-என்று கேட்டுக் கொண்டே மாடப் பிறையிலிருந்த கை விளக்கை எடுத்து அவர்கள் அருகே ஒளியைப் பரவவிட்ட செல்வப் பூங்கோதை, இருவரும் யாரென்று தெரிந்ததும் திகைத்தாள். அவர்கள் இருவரும் பெரியவர் மதுராபதி வித்தகருக்கு மெய்க் காவலாக நியமிக்கப்பட்டிருந்த தென்னவன் ஆபத்துதவிகளாக இருக்கக் கண்டு அவளுக்கு வியப்பாயிருந்தது. பெரியவர், அந்தப் பகுதியை விட்டு எங்கோ மறைவாகப் போய்ப் பல திங்கள் காலம் கடந்த பின், நீண்ட நாட்களுக்கு அப்பால் தன் எதிரே அவருடைய மெய்க் காவலர்களைக் கண்டு ஒன்றும் புரியாத மனக் குழப்பத்தோடு,

“தந்தையார் ஊரில் இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? பெரியவர் இப்போது எங்கே எழுந்தருளி இருக்கிறார்?” என்று வினவினாள் அவள்.

“உங்கள் தந்தையார் இப்போது இங்கே திருமோகூரில் இல்லை என்பதை நாங்களும் அறிவோம் அம்மா! இப்போது நாங்கள் தேடி வந்தது உங்களைத்தான்! உங்கள் தந்தையாரை அல்ல...பெரியவர் இப்போது இந்தக் கணத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்காக, இங்கே திருமோகூருக்கே எழுந்தருளி, ஆல மரத்தடியில் தங்கியிருக்கிறார் என்று நாங்கள் கூறினால், நம்புவதற்கு அரியதாயிருக்கும்.”

“மெய்யாகவா இங்கு எழுந்தருளியிருக்கிறார்?”

“உயிரே போவதானாலும் தென்னவன் ஆபத்துதவிகள் பெரியவர் பற்றி மெய் அல்லாததைக் கூறமாட்டோம் அம்மா! அவர் கட்டளைப்படியே தங்களை உடனே அழைத்துச் செல்லத்தான் இப்போது இங்கு வந்தோம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/456&oldid=946685" இலிருந்து மீள்விக்கப்பட்டது