பக்கம்:நித்திலவல்லி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கேட்ட போது, வேறு ஏதோ புனைந்து கூறியிருந்தாள் அவள். தாயிடம் கூறியது பொய்யாகி விடாமல், போகிற வழியிலேயே கொற்றவையை வணங்கிச் செல்லவும் நினைத்தாள்.

“போகலாம்! வாருங்கள்” என்று சொல்லி அவர்கள் புறப்பட்டதும் பின் தொடர்ந்தாள் அவள். வாயிற்புறம் வரும்போது முதலில் நடை தடுக்கியதனாலும், மனம் இனம் புரியாமலே வேகமாக அடித்துக் கொண்டதாலும், இன்னதென்று புரியாத ஒருவகை மருட்சியும், பயமும் ஆட்கொண்டிருந்ததாலும், இளையநம்பியின் காதல் மயமான ஓலையைப் படித்த உற்சாகம் அவள் இதயத்தில் இன்னும் நிறைவாக இருந்தது. அந்த உற்சாகம், அவளை எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் நடந்து போகச் செய்ய முடியும் போலிருந்தது. நடு வழியில் கோவில் வாயிலில், ஒரு கணம் நின்று கொற்றவையை வணங்கினாள். மனத்தின் உற்சாகம் புறத்தே தெரிய, அப்போதில் அவள் நடையே ஒட்டமாக இருந்தது. பெரியவர் வழக்கமாகத் தங்கும் அந்தப் பெரிய ஆலமரத்தடிக்குப் போய்ச் சேர்ந்ததும், அவளை அழைத்து வந்த ஆபத்துதவிகள் வெளிப்புறமே விலகி நின்று கொண்டனர். உள்ளே செல்லும் முன்பாக வந்த வேகம் குறைந்து, அவள் கால்கள் வெளிப்புறமே தயங்கின. என்ன காரணத்தினாலோ, உள்ளே செல்வதற்குக் கால்கள் நகர மறுப்பதை அவள் உணர்ந்தாள். ஆனால் செயல்பட முடியவில்லை.

அன்று என்னவோ இருள் சூழ்ந்து விட்ட அந்த நேரத்தில், அந்தப் பழம் பெரும் ஆலமரமும், அதைச் சுற்றிய பகுதிகளும் இயல்பை மீறிய அமைதியோடு தென்பட்டன. குகை போல் இருந்த அடிமரப் பொந்தின் முனையில் ஒளி தந்து, தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முன்பெல்லாம் பெரியவர் இதே இடத்தில் தங்கியிருந்த போது, இந்தப் பகுதி இந்த நேரத்திற்கு எவ்வளவு கலகலப்பாக இருக்குமோ, அவ்வளவு கலகலப்பாக இன்று, இப்போது இல்லை என்பது போல் அவளுக்குப் புரிந்தது. எல்லாமே, எதையோ எதிர்பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/458&oldid=946687" இலிருந்து மீள்விக்கப்பட்டது