பக்கம்:நித்திலவல்லி.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

465



“இன்று நீ மிக, மிக மகிழ்ச்சியாயிருப்பதால், உன்னை நான் விரைவாக விடை கொடுத்து அனுப்புவதுதான் முறை. செல்வப்பூங்கோதை! நாளை மாலைக்குள் நீ மீண்டும் வா! வரும் போது இந்தக் கிழவனின் ஆசையை மறந்து விடாமல், தேனும் தினை மாவும் கொண்டுவா... நாளை இரவில், நான் இங்கிருந்து புறப்பட்டு விடுவேன். கோநகர் சென்று, வையையின் வடகரையில் மறைந்து தங்கப் போகிறேன். அப்படிப் புறப்படுமுன் இந்தக் கிழவனுக்கு உன்னிடமிருந்து ஒரு நல்வாக்குக் கிடைக்க வேண்டும். அந்த நல்வாக்கைக் கோரவே இன்று இங்கு வந்தேன்! நீ மறுக்க மாட்டாய் என்பதை நான் அறிவேன்.”

“ஐயா! தங்களைப் போன்றவர்கள் வேண்டவும், கோரவும் செய்கிற அளவு நான் அத்துணைப் பெரியவளில்லை. தாங்கள் எனக்குக் கட்டளை இடவேண்டும். தங்கள் கட்டளைக்கு இந்தப் பேதை எக்காலத்திலும் கடமைப்பட்டிருப்பவள். தாங்கள் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்” என்று மிகவும் பணிவாகக் கை கூப்பினாள் செல்வப்பூங்கோதை. இப்படி வணங்கும் போதே, அவரைக் கருங்கல்லாகவும், தன்னை மென்மையான மலர் மாலையாகவும் ஒப்பிட்டுச் சிந்தித்துத் தான் முன்பொரு முறை அஞ்சியதையும் நினைத்துக் கொண்டாள் அவள். கொடியாகத் துவண்டு பணிந்து மறுமொழி கூறிக் கொண்டிருந்தாலும், உள்ளுற அவளுக்கு அவரிடம் அச்சமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. அந்த மாமலை, வாடித் துவளும் கொடி போன்ற தன்னைத் தலையெடுக்க விடாத படி எந்தத் தந்திரத்தினாலாவது நசுக்கி விடுமோ என்று. பயந்து பதறினாள் அவள். தன்னைப் போன்ற பேதைப் பெண்களைப் பற்றி, இவ்வளவு அக்கறையோடும், பிரியத்தோடும் நினைக்கிற வழக்கமே இல்லாத அவர், இன்று காட்டும் இந்தப் பரிவைப் பார்த்து அவள் வியந்ததை விடப் பயந்ததே அதிகமாயிருந்தது.

“நாளைக்கு மாலையில் மீண்டும் வா அம்மா! தேனையும் தினை மாவையும் மட்டும் மறந்து விடாதே.”

நி.வ-30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/463&oldid=946692" இலிருந்து மீள்விக்கப்பட்டது