பக்கம்:நித்திலவல்லி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

467



மறுநாள் காலை பொழுது புலர்ந்து நீராடி முடித்ததுமே, உரலில் தினை இடிக்கத் தொடங்கினாள் அவள். இப்படி அடிக்கடி அவள் தினை இடிப்பதும் வழக்கமான காரியமே என்பதனால், தாய் அதைப் பற்றியும், அவளை எதுவும் கேட்கவில்லை. பெரியவரே வாய் திறந்து கேட்டிருக்கிறார் என்பதனால், நல்ல செந்தினையாக எடுத்து முறத்தில் இட்டு, நொய்யும், நுறுங்கும் களைந்து புடைத்த பின்பே, உரலில் கொட்டி இடிக்கலானாள். நாவின் சுவைக்கு ஆசைப்பட்டுத்தான் பெரியவர் தேனும், தினை மாவும் கொண்டு வரச் சொல்லித் தன்னை வேண்டிக் கொண்டதாக அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. கசப்பு நிறைந்த காஞ்சிரங் காயையும் வேப்பிலைக் கொழுந்தையும் தின்று உடலை வைரம் பாய்ந்ததாக்கிக் கொண்டிருப்பவர், தேனுக்கும் தினை மாவுக்கும் ஆசைப்பட்டுத் தன்னை வரவழைத்துப் பேசியிருக்க முடியும் என்பதை அவளால் ஒப்புக் கொள்ளவும் இயலவில்லை. வேறு ஏதோ பெரிய வேண்டுகோளைத் தன்னிடம் கேட்பதற்கு ஏற்ற பரிவையும், பக்குவத்தையும் உண்டாக்குவதற்குத் தக்கபடி தான் இருப்பதையும், இல்லாததையும் சோதித்து ஆழம் பார்க்கவே இந்த ஏற்பாடோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், மிகவும் சிரத்தையாகத் தினை மாவை இடித்துப் பிசைந்தாள் அவள். மாளிகைப் பணியாட்களிடம், நல்ல கொம்புத் தேனாகத் தேடி இறக்கிப் பிழிந்து வருமாறு அனுப்பினாள். பிற்பகலுக்குள் செங்குழம்பாகப் புத்தம் புதிய கொம்புத் தேன் பிழிந்த நுரையோடு வந்து சேர்ந்தது. பதம் பார்த்து அளவாகவும் சுவையாகவும் கலந்து நெல்லிக்கனிப் பிரமாணத்திற்கு உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டாள். தனியே ஒரு சிறிய குவளையில் தேனும் எடுத்துக் கொண்டாள். பெரியவரைத் தேடி அவள் மாளிகையிலிருந்து புறப்படும் போது, பிற்பகல் கழிந்து மாலை வேளை தொடங்கியிருந்தது. முதல் நாளைப் போலவே கொற்றவைக் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டுத் திரும்பி வருவதாகத்தான் தாயிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. இன்றும் ஆபத்துதவிகள் தன்னைத் தேடி வந்து அழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/465&oldid=946694" இலிருந்து மீள்விக்கப்பட்டது