பக்கம்:நித்திலவல்லி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

470

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


'எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்! எதற்காகக் கூப்பிட்டு அனுப்பியிருப்பார்?’ என்று அவளை எண்ணி ஏங்கித் தவிக்க விட்ட பின், ஒடி ஒடித் தவித்த மானைத் தந்திரமாக வலை வீசிப் பிடிப்பது போல், இறுதியாக அவளை வீழ்த்தும் சாதுரியமான வேடனைப் போன்று தன் சொற்களை அடக்கி மெளனமாகக் காத்திருந்தார் அவர். எதிர் எதிர் மெளனங்களை இருவருமே ஒருவருக்கு ஒருவர் விரும்பாத அந்த நிலை, சிறிது நேரம் நீடித்தது. ஆவலை அடக்க முடியாமல் அவள் தன் மெளனக் கோட்டையின் கதவுகளைத் தானே திறந்து கொண்டு வெளிப்பட்டாள்:

“ஐயா! தாங்கள் இந்தப் பேதையைத் தனியே கூப்பிட்டனுப்பிய காரியம் பெரியதாயிருக்க வேண்டும். அது இன்னும் எளியாளிடம் தெரிவிக்கப்படவில்லை... அந்தக் கட் டளைக்காகவே இன்னும் இங்கே காத்து நிற்கிறேன் நான்...”

“உன்னிடம் நான் இங்கிருந்து புறப்படு முன், ஒரு நல் வாக்கு வேண்டப்போகிறேன் என்று நேற்றே சொல்லி யிருந்தேன்... நினைவிருக்கிறதா, செல்வப் பூங்கோதை?”

“நன்றாக நினைவிருக்கிறது ஐயா.”

“ஒரு வீரனின் குறிக்கோள் தன் வாளுக்கு மட்டும் வெற்றியைத் தேடுவதோடு நிறைவு பெற்றுவிடுகிறது அம்மா! ஆனால் என்னைப் போல ஒர் அரச தந்திரி, தாம் சார்ந்திருக்கும் தேசம் முழுமையும் வெற்றி பெறுகிற வரை அறிவினால் போராட வேண்டியிருக்கிறது... இடைவிடாமல் போராட வேண்டியிருக்கிறது. நிகழ்கால வெற்றிக்காக மட்டுமின்றி, எதிர்கால வெற்றியையும் இன்றே தீர்மானித்துப் போராட வேண்டியிருக்கிறது.”

அவர் எதற்காக இதைத் தன்னிடம் கூறுகிறார் என்பது அவளுக்கு உடனே புரியவில்லை. ஆனால் மனம் மட்டும் பதறியது. பதற்றத்தோடு பதற்றமாக அவள் கேட்டாள்:

“ஐயா! பாண்டி நாட்டை மீட்கத் தாங்கள் மேற்கொண்ட துன்பங்கள் பெரியவை... நன்றிக்குரியவை... என்றுமே மறக்க முடியாதவை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/468&oldid=946697" இலிருந்து மீள்விக்கப்பட்டது