பக்கம்:நித்திலவல்லி.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

473


கொண்டிருந்தனர். கோநகரப் பொது மக்கள் எதையோ புரிந்து கொண்டது போலவும், எதையோ வரவேற்பது போலவும், எதற்கோ ஆயத்தமாயிருப்பது போலவும் தோன்றினர். வெள்ளியம்பல மன்றத்தில் வெள்ளம் போல் பெரிய யாத்திரிகர் கூட்டம் கூடியிருந்தது. பெருமழை பெய்ய மேகங்கள் கூடி மூட்டம் இருட்டிப்பது போல், நகர் எங்கும் ஒரு மர்மமான சூழ்நிலை மூடியிருந்ததைக் கூர்ந்து நோக்குகிற எவரும் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டுப்படுத்தி விட முடியாத ஓர் உணர்ச்சி, நகர் எல்லையில் மெல்ல மெல்லப் பொங்கிப் புடைத்துக் கிளர்ந்து எழுந்து கொண்டிருந்தது. இருந்த வளமுடையார் கோவிலிலும், ஆலவாய் இறையனார் திருக்கோயிலிலும், ஆறு போற் பெருங் கூட்டம் வழி பட திரும்பிக் கொண்டிருந்தது. திருப்பரங்குன்றிலிருந்து கோநகருக்கு வந்து சேரும் அரச வீதியாகிய புறச்சாலையில், கடல்போற் பெரிய மக்கள் கூட்டம் தென்பட்டது. எல்லாரும் அகநகரைச் சேர்ந்தவர்களாகவும் தெரியவில்லை. புலவர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். உழுதுண்ணும் வேளாண்குடி மக்களைப் போல் சிலர் தோன்றினார்கள்; மற்போர் மைந்தர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். எல்லாரும் ஒரே நோக்கமுடையவர்கள்தான் என்பது போல், அவர்களைப் பற்றி அதுமானம் செய்து கொள்ள மட்டும் இடமிருந்தது. வந்திருப்பவர்களின் தோற்றங்கள் வேறு, வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருக்கும் என்று நினைக்க முடிந்த விதத்திலேயே அவர்கள் ஒருவருக்கொருவர் பழகிக் கொண்டனர். கலகத்துக்குக் கருக் கொள்வது போல் பகல் முழுவதும் இதே நிலை நீடித்தது. கதிரவன் மலையில் விழுகிற நேரத்துக்கு முதற் கலகம் விளைந்தது. இரத்தம் சிந்தியது.

வெள்ளியம்பல மன்றில் இறங்கித் தங்கியிருக்கும் யாத்திரிகர் கூட்டம் முழுமையுமே மாறு வேடத்தில் வந்திருக்கும் பாண்டிய வேளாளர் படையோ என்ற ஐயப்பாட்டோடு பிற்பகலில் மாவலி முத்தரையர், கலியரசனைக் கண்டு பேசி எச்சரித்தார். கொற்கையில் இருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/471&oldid=946700" இலிருந்து மீள்விக்கப்பட்டது