பக்கம்:நித்திலவல்லி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

474

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


போர் முனைகளுக்குப் போக வேண்டிய குதிரைகள் போகவில்லை என்பதும் அவரால் கலியரசனுக்குத் தெரிந்தது.

“கலியா! குடி முழுகி விட்டது. முன்பு பழைய அவிட்ட நாள் விழாவின் போது அவர்கள் ஏமாந்தார்கள். இப்போது நாம் ஏமாற்றப் பட்டு விட்டோம். கோநகரில் இந்தக் கணத்தில் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். புற நகரிலும் அவர்கள் கூடி வளைத்திருக்கிறார்கள். நம்முடைய எல்லா வலிமையையும், எல்லைகளில் குவித்து விட்டதால், இங்கே இப்போது நாம் பலவீனமாயிருக்கிறோம்! கப்பலில் வந்திறங்கிய குதிரைகளும், பாண்டிய வேளாளர்களால் கைப்பற்றப்பட்டிருக்குமோ என அஞ்சுகிறேன்.”

இதைக் கேட்டுக் களப்பிரக் கலியரசன் துள்ளி எழுந்தான். முன் கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான். தீயெழ விழித்தான். சீறினான். அரண்மனை எல்லையிலிருந்த சில நூறு வீரர்களை ஒன்று திரட்டி மாவலி முத்தரையர் தலைமையில், உடனே வெள்ளியம்பல மன்றத்திற்குத் துரத்தினான். அரண்மனை உட்கோட்டை மதில்களை அடைத்துக் கொண்டான். உள்ளேயிருந்த எஞ்சிய களப்பிர வீரர்களை மதில் மேல் ஆங்காங்கே மறைந்திருந்து மதிற் புறத்தை வளைக்க வரும் பாண்டிய வீரர்கள் மேல் வேலெறிந்தும், அம்பெய்தும் தாக்குமாறு கட்டளை யிட்டான். பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தடுமாறினான்.

மாவலி முத்தரையர், தம்முடன் கலியரசன் அனுப்பிய நூறு களப்பிர வீரர்களோடு வெள்ளியம்பல மன்றத்தை நெருங்குவதற்கு முன்பே, நிலைமை கை மீறிப் போயிருந்தது. வெள்ளியம்பல மன்றிலில் இருந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களும், தேசாந்திரிகளின் கோலம் மாறிப் போர் வீரர்களாக எழுந்து நின்றனர். அவர்கள் மூட்டை முடிச்சுகள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு, ஆயுதங்களாக வெளிப்பட்டு, வேலாகவும், வாளாகவும், கேடயங்களாகவும் விளங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/472&oldid=946701" இலிருந்து மீள்விக்கப்பட்டது