பக்கம்:நித்திலவல்லி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


மணல் கோட்டை போல்தான் இருந்தது. எல்லாமே பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. உள்ளே நுழைந்ததும், இவர்கள் சிறைக்கூடங்களைத் தகர்த்து விடுவித்த போது அந்த இருட் கூடத்தில், யார் எதற்காகக் கதவுகளை உடைத்துத் தங்களை விடுவிக்கிறார்கள் என்பதை முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களே புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் வந்து தழுவிக் குரல் கொடுத்த போதுதான் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல உணவும், நல்ல காற்றும், நல்ல ஒளியும் இல்லாமல் அவர்கள் அந்தச் சிறையில் வாடித் தளர்ந்திருந்தனர். பாதாளச் சிறைப் பகுதியிலிருந்து மேற்புறம் அரண்மனைப் பகுதிக்கு வந்தவுடன், அவர்கள் எதிர் பாராதது ஒன்று நடந்தது. உடன் வந்து கொண்டிருந்த திருமோகூர் அறக் கோட்டத்து மல்லன் திடீரென்று வெறி கொண்டவனாக மாறி, அருகே நின்றிருந்த கொல்லனின் இடை வாளை உருவிக் கொண்டு, “தென்னவன் மாறனைக் கொன்ற அந்தப் பாவியைப் பழி தீர்க்காமல் விட மாட்டேன்” என்று உரத்த குரலில் சூளுரைத்தவாறே உருவிய வாளுடன் அரண்மனைக்குள் பாய்ந்து ஓடினான். மின்னல் வேகத்தில் புயல் புறப்பட்டது போல் பாய்ந்து ஓடிய அவனை யாராலும் அப்போது தடுக்க முடியவில்லை.

“மல்லா பொறு... ஆத்திரப்படாதே” என்று காராளர் கூறியதையும், அவன் பொருட்படுத்தவில்லை.

இளையநம்பியின் தலைமையில் நிலவறை வழியாக அரண்மனைக்குள் நுழைந்த வீரர்கள், நான்கு வேறு அணிகளாகப் பிரிந்தனர். இளையநம்பி ஓரணியையும், காராளர், கொல்லன், அழகன் பெருமாள் ஆகிய மற்ற மூன்று அணிகளையும் தலைமை தாங்கி நடத்திக் கோட்டைக் கதவுகளைத் திறந்தனர். வெளியே முற்றுகை இட்டிருந்த பாண்டிய வீரர்களும் உள்ளே நுழைந்ததால், பாண்டியர் படை பலம் கடலாகப் பெருகியிருந்தது. கோட்டை வீழ்ந்து விட்டது. அரண்மனை வாயிலில் பல்லாயிரம் பாண்டிய வீரர்கள் வாழ்த்தொலி முழக்க, இளஞ் சிங்கம் போல் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/476&oldid=946705" இலிருந்து மீள்விக்கப்பட்டது