பக்கம்:நித்திலவல்லி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

480

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொன்றிருக்கிறான் என்பது நினைவு வந்தவுடன், அவனுடைய கூச்சம் அகன்று மனதில் கடுமை சூடேறியது. கோட்டையைக் கைப்பற்றியதும் முதல் கட்டளையாக, “இங்கே அரண்மனை அந்தப்புரத்தில் உள்ள களப்பிரப் பெண்களையும், நகரின் எல்லையிலுள்ள பாலி மொழிப் புலவர்களையும், கலைஞர்களையும், களப்பிரர்களின் சமயத்தைச் சேர்ந்த துறவிகளையும் மிகவும் பாதுகாப்பாகப் பாண்டிய நாட்டின் எல்லை வரை வெளியேற்றிக் கொண்டு போய் விட்டு வர வேண்டும்-” என்று முன் எச்சரிக்கையாக அறிவித்திருந்தான் இளையநம்பி.

களப்பிரர்-பாண்டியர் பழம்பகையில் பெண்களும், புலவர்களும், கலைஞர்களும், துறவிகளும் துன்புற நேரிடக் கூடாது என்றே முன்னெச்சரிக்கையோடு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாண்டிய மரபின் பெயர் களங்கப்படும் விதத்தில் எந்தப் பூசலும் கோநகரில் நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் இளையநம்பி கண்ணும் கருத்துமாயிருந்தான். பாண்டிய மரபின் பெருமைக் குறைவின்றி உரிய முறையில் இலவந்திகைக் காட்டில் பெருஞ்சித்திரனின் அந்திமக் கிரியைகள் நடைபெற்றன. அது முடிந்து மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும், பெரியவர் கூறியிருந்த பிரம்ம முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரே நல்வாழ்த்துகளுடன் அனுப்பியிருந்த கொடியை, மதுரை மாநகரக் கோட்டையில் ஏற்ற வேண்டும். ஊரறிய, உலகறிய மீண்டும் பாண்டியப் பேரரசு உதயமாவதன் அடையாளமாக இப்போது அவர்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது.

வைகறையின் குளிர்ந்த காற்றோடு, அந்தக் கொடியேற்றத்திற்கு வானமே வாழ்த்துக் கூறுவது போல் மெல்லிய பூஞ்சாரலாக மழையும் பெய்யத் தொடங்கியிருந்தது. விடிகாலைப் பறவைகளின் குரல்களும், வைகறைப் பண் பாடும் இசைவாணர் வாழ்த்தொலிகளும், கோட்டை முன்றிலில் கூடியிருந்த ஆயிரமாயிரம் பாண்டிய வீரர்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/478&oldid=946707" இலிருந்து மீள்விக்கப்பட்டது