பக்கம்:நித்திலவல்லி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


வெளியேறிய உன் முன்னோர்கள், இது தங்கள் குலநிதி என்பதற்கு ஒர் அடையாளமாக அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒன்பதே ஒன்பது முத்துகளை மட்டும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் என்பது செவி வழி வழக்கு. இந்த முத்துகள், சில தலைமுறைகளாகக் கொற்கையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அண்மையில்தான் இவற்றோடு உன் தம்பி முறையிலான பெருஞ்சித்திரன் நான் கூப்பிட்டனுப்பி என்னிடம் வந்தான் நேற்று மாலைப் போரில் அவன் மாண்ட செய்தியையும், வருகிற வழியில் கேள்விப்பட்டு வருந்தினேன். இப்போது உன் குலநிதியாகிய இந்த முத்துகளை உன்னிடம் ஒப்படைத்து விட வேண்டியது என் கடமை. உன் அரச பண்டாரமாகிய பொக்கிஷத்தில் இந்த முத்துகளை முதலில் கொண்டு போய் வைத்து, ஆட்சியைத் தொடங்கு!” என்று கூறிப் பேழையைத் திறந்து முத்துகளை, எல்லார் முன்னிலையிலும் எடுத்து, இளைய நம்பியிடம் வழங்கினார் பெரியவர். வணக்கத்தோடு அவற்றைப் பெற்றுக் கொண்டான் இளையநம்பி.

அந்த முத்துகளை கண்களில் ஒத்திக் கொண்டு அவன் நிமிர்ந்த போது, இரத்தினமாலை கண்களில் நீர் நெகிழ, அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

மதுராபதி வித்தகர் இரத்தினமாலையின் முத்துப் பல்லக்கில் நகர் வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அரண்மனையை அடைந்தார். ஏழு வெண் புரவிகள் பூட்டிய தேரில், இளைய நம்பியும் நகருலாவாகச் சுற்றி வந்து, அரண்மனையை அடைந்தான். பெரியவர் ஆவலாய் இறையனார் திருக்கோயிலுக்கும், உவணச் சேவற் கொடி உயர்த்திய இருந்த வனத்திற்கும் சென்று நெஞ்சுருக வழிபட்டு வணங்கினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நலிந்து போயிருந்த கோநகரின் சிறந்த புலவர்கள், கலைஞர்கள், வீரர்கள், சமய வாதிகள் அறக்கோட்டங்கள் எல்லாரையும், எல்லாவற்றையும் மீண்டும் மதுரை மாநகரின் புகழுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/482&oldid=946712" இலிருந்து மீள்விக்கப்பட்டது