பக்கம்:நித்திலவல்லி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

485


பெருமைக்கும் சிறப்புக்கும் உரியதாகும்படி அவர் இளைய நம்பியிடம் கூறி மாற்றினார். இளையநம்பியின் பாட்டனாரும், தம்முடைய நெருங்கிய நண்பரும் ஆகிய திருக்கானப்பேர் பாண்டியர் குல விழுப்பரையரை, உடனே எல்லாப் பெருமைகளுடனும் உரிய கெளரவத்துடனும் கோநகருக்கு அழைத்து வருமாறு, தூதர்களை அனுப்பச் செய்தார். காராளரைக் கூப்பிட்டு, “கோநகரின் வெற்றி மங்கலக் கோலாகலங்ளைக் கண்டு களிக்க உங்களுடைய குடும்பத்தினரைப் புறப்பட்டு வரச் சொல்லி ஆளனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார். காராளரும் உடனே தம் மனைவியையும், மகள் செல்வப்பூங்கோதையையும் கோநகருக்கு அழைத்து வருமாறு கொல்லனை திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். பைந்தமிழ்ப் புலவர்கள் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வந்து வெற்றி மங்கலம் பாடிப் பரிசுகள் பெறலாமென்று எங்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மிக முதிய புலவரும், பாண்டிய மரபுக்கு மிகவும் வேண்டியவருமான ஒருவர் இளையநம்பிக்கு முடி சூட்டுங் காலத்துச் சிறப்புப் பெயராக, ‘இருள் தீர்த்த பாண்டியன்' என்ற அடைமொழியை வழங்கிப் புகழ்மாலை சூட்டினார். தொடர்ந்து, கோநகரும், அரண்மனையும் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தன. திருக்கானப்பேரிலிருந்து பாண்டிய குல விழுப்பரையர் சில நாட்களில் அழைத்து வரப்பட்டார். செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் கோநகருக்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். இன்னும் எல்லைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களின் முடிவு தெரியவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். கோட்டையில் மீனக் கொடி பறக்கத் தொடங்கி ஏழு நாட்கள் ஒடி விட்டன. எட்டாம் நாள் காலையில் போர் நிகழும் எல்லைகளிலிருந்து தூதர்கள் தேடி வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும், பெரியவர் அவர்களைச் சந்திக்க வந்தார். அரண்மனையில் தூதர்களை எதிர் கொள்ளும் அந்தரங்க மந்திராலோசனை மண்டபத்துக்கு அவர் வந்த போது, இளையநம்பியும் அங்கே இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/483&oldid=946713" இலிருந்து மீள்விக்கப்பட்டது