பக்கம்:நித்திலவல்லி.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

488

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


மதுராபதி வித்தகர். அவர் முன்னிலையில், அரச தூதர்களுக்குரிய முறைகளுடனும், பெருமைகளுடனும், அவர்களை விடை கொடுத்து வழியனுப்பி வைத்தான் இளையநம்பி.

வந்திருந்த தூதர்கள் புறப்பட்டுச் சென்ற பின், அந்த மாபெரும் அலங்காரக் கூடத்தில் பெரியவர் மதுராபதி வித்தகரும், பாண்டியன் இளைய நம்பியும் தனியே எதிர் எதிராக நின்று கொண்டிருந்தனர். பிரம்மாண்டமான தூண்களும், பளிங்குத் தரையும், முத்துப் பதித்த இருக்கைகளும், இரத்தினக் கம்பளங்களும் எல்லாம் நிசப்தமாக ஒடுங்கியிருந்து, அவர்கள் இருவரையும் கவனிப்பது போல தோன்றின. அவனிடம் பேசுவதற்கு என்று அவரிடமும், அவரிடம் பேசுவதற்கென்று அவனிடமும் இரகசியங்கள் இருந்தன. முதலில் யார் தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று ஒரே சமயத்தில் இருவருமே தயங்கி நின்றாற் போலிருந்தது அவர்கள் நிலை. அவருடைய அந்தப் பெரிய கண்கள், அவனையே நேருக்கு நேர் நோக்கிக் கொண்டிருந்தன. சில கணங்கள் தயக்கத்திலும், மெளனத்திலும் கழிந்த பின் அவர் தாம் முதலில் பேசினார்:

“இந்தக் கணத்தில் நீ என்னிடம் கேட்கத் தவிப்பது என்னவாக இருக்கும் என்பதை நானே புரிந்து கொள்ள முடிகிறது. இளையநம்பி! நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டுவிட்டால், அதன்பின் நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமலும் போய்விடலாம்! அரசர்கள் கொடுக்க வேண்டியவர்களே, தவிர கேட்க வேண்டியவர்கள் இல்லை! ஆனால், நீ இன்னும் முறைப்படி முடி சூட்டிக் கொண்டு பாண்டிய நாட்டின் அரசன் ஆகிவிடவில்லை. ஆகவே நான் உனக்குக் கட்டளையிடலாம். அரசனாகிய பின், உன்னிடம் என் வாக்குறுதிகளை நான் கேட்க முடியுமோ, முடியாதோ? இப்போதே உன்னிடம் அவற்றைக் கேட்டு விடுகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/486&oldid=946716" இலிருந்து மீள்விக்கப்பட்டது