பக்கம்:நித்திலவல்லி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



“தாங்கள் கூறுவது புரியவில்லையே ஐயா?”

அவன் குழப்பத்தோடு அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவரோ தயங்கினாற் போல் நின்றார்; மீண்டும் மெளனமும், ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கும் அமைதியும், இருவருக்கு இடையேயும் நிலவின. மெளனம் நீங்கி அவனே, அவரைக் கேட்டான்:-

“தயை கூர்ந்து வாக்குறுதிகளைச் சொல்லுங்கள் ஐயா?”

“இளையநம்பீ! என் முன்னோர்கள் பரம்பரையாகச் சங்கமிருந்து தமிழாய்ந்த புலவர்கள். நான் அந்த மரபில் வந்தவனாக இருந்தும், என் காலம் முழுவதும் நான் களப்பிரர்களை ஒழிக்கச் சாதுரியமும், சூழ்ச்சியும் புரிவதிலேயே கழித்து விட்டேன். காரணம், களப்பிரர் ஆட்சி நடந்த தலைமுறைகளில், அவர்கள் சிறிது சிறிதாகத் தமிழ் நாகரிகத்தையே அழித்து விட முயன்றார்கள். தமிழ்ச் சங்கத்தை அழித்தார்கள். தமிழ்ப் புலவர்களைச் சீரழிய விட்டார்கள். ஆகவே, நீ செய்ய வேண்டிய முதற் காரியம், உன் முன்னோர்கள் புகழ் பெற நடத்திய தமிழ்ச் சங்கத்தை மீண்டும் நடத்திப் புலவர்கள் தமிழாராயவும், நூல்களை அரங்கேற்றவும், பரிசில் பெறவும் உதவுவதாக இருக்க வேண்டும். ஒரு மொழியோடு, நாகரிகமும் அழியாமற் காக்க இதை நீ உடனே செய்ய வேண்டும். இந்த வேண்டுகோளை உன் முதல் வாக்குறுதியால் நிறைவேற்று!”

“மகிழ்ச்சியோடு நிறைவேற்றுகிறேன் ஐயா! இனி அடுத்த வாக்குறுதிக்கான வேண்டுகோளைச் சொல்லுங்கள்!”

“உன் ஆட்சிக் காலம் வரை, எக்காரணத்தைக் கொண்டும் நீ பாண்டிய நாட்டின் எல்லைப்புற நாடுகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களோடு போரைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், மீண்டும் களப்பிரர்கள் தனியாகவோ, வேறு யாருடனாவது சேர்ந்தோ, உன் மேல் படையெடுத்து வருவது தவிர்க்க முடியாததாகி விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/488&oldid=946718" இலிருந்து மீள்விக்கப்பட்டது