பக்கம்:நித்திலவல்லி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


யிலேயே நிறுத்திக் கொண்டார். எதுவுமே பதில் பேசத் தோன்றாமல், அப்படியே திக் பிரமை பிடித்து நின்று விட்டான் அவன். “நான் உன்னிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு விட்டால், அதன் பின், நீ என்னிடம் கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமலும் போய் விடலாம்” என்று, உரையாடலைத் தொடங்கும் போதே, அவர் கூறியதை இப்போது மறுமுறை நினைத்தான் அவன். நினைவுகள் தளர்ந்து, உணர்வுகள் ஓய்ந்து அந்த வேண்டுகோளைச் செவியுற்ற பின், கண்களில் நீர் மல்க, அவன் தம் எதிரே நின்ற வேதனைக் கோலத்தைக் கண்டு, அவருக்கே வருத்தமாக இருந்தது. அவர் கூறினார்-

“என் மேல் தவறில்லை இளையநம்பி! 'இந்த உலகில் கண்ணீரோடுதான் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டியிருக்கும்’ என்று நான் முதலிலேயே சொல்லி விட்டேன்.”

“இதில் என் கண்ணீர் மட்டுமில்லை ஐயா, திருமோகூர்க் காராளர் மகள் செல்வப்பூங்கோதையின் கண்ணீரும் அடங்கியிருக்கிறது...”

“எனக்கு எல்லாம் தெரியும்! கொல்லனிடம் இருந்து நான் அனைத்தையும் கேட்டறிந்திருக்கிறேன். நானாகவும் உங்கள் நேசத்தை அநுமானித்திருந்தேன். காராளர் மகளை மணக்க விரும்பும் உன் ஆசையைத்தான், நீ இன்று இங்கே என்னிடம் வெளியிட இருந்தாய் என்பதைக் கூட நான் அறிவேன். அதனால்தான், ‘நான் என் வாக்குறுதிகளைக் கூறிய பின், நீ என்னிடம் கேட்க எதுவும் இல்லாமலும் போகலாம்’ என்று முதலிலேயே கூறியிருந்தேன்!”

“இப்படி ஒரு நிலை வரும் என்றால், நான் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை முயன்று வென்றிருக்க வேண்டியதே இல்லை! ஒரு பாவமும் அறியாத பேதைப் பெண்ணொருத்தியைக் கண்ணீர் சிந்தி அழவிட்டு விட்டு நான் அரியணை ஏறுவதை விடச் சாவது மேலான காரியமாக இருக்கும் ஐயா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/490&oldid=946720" இலிருந்து மீள்விக்கப்பட்டது