பக்கம்:நித்திலவல்லி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

493



“இப்படி ஒரு கோழையைப் போல் பேசாதே! நீ நினைத்தா, இந்த வெற்றியும் மாற்றமும் விளைந்தன? நாட்டின் நன்மையை விட எந்தத் தனி ஒருத்தியின் கண்ணீரும் பெரியதில்லை. 'நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்கமாட்டேன்’ என்று அந்த ஒருத்தியிடமே, கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்து வாக்கு வாங்கியிருக்கிறேன் நான்...”

“நீங்கள் வாக்கு வாங்கியிருக்கலாம்! ஆனால், இந்த நாட்டின் வெற்றியை நாடி நான் முதன் முதலாகத் திருக்கானப் பேரிலிருந்து புறப்பட்டு வந்த போது அந்த வெற்றிக்காகத் தங்களைக் காண வேண்டிய முதல் ஒற்றையடிப் பாதையை எனக்குக் காண்பித்தவள் அவள்...”

“சில ஒற்றையடிப் பாதைகளில் அதைக் காட்டுகிறவர் உடன் நடந்து வர முடியாமலும் போய்விடலாம்.”

“ஆனால், அதில் நடக்கத் தொடங்கியவன் அதன் வழியே நடந்து ராஜபாட்டைக்குச் சேர்ந்தவுடன், முதற் சிறு வழியைக் காட்டியவர்களை மறந்து விடுவது, என்ன நியாயம் ஐயா?”

“இளையநம்பீ! நியாயங்களைக் கேட்டு என்னைச் சோதனை செய்யாதே. இதில் உன்னையும், செல்வப் பூங்கோதையையும் விட என் அந்தராத்மா கோவென்று கதறி, உங்களைப் போல் அழ முடியாதபடி அறிவும், சாதுரியமுமே என்னைக் கல்லாக்கியிருக்கின்றன என்பதை நீ அறிவாயா?”

இதைக் கேட்ட பின், அவனால் அப்போது அவரை எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை.

“மூன்று வாக்குறுதிகளை நீயும், 'நாட்டின் நன்மைக்குக் குறுக்கே நிற்பதில்லை’ என்ற ஒரு வாக்குறுதியைச் செல்வப் பூங்கோதையும் ஏற்கிறீர்கள்?" என்று அவர் மீண்டும் உரத்த குரலில் கட்டளை போல் கூறியதும், கடமையை உணர்ந்து ‘ஆம்’ என்பதற்கு அடையாளமாகக் கண்ணீரோடு அவர் முன்பு தலை வணங்கினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/491&oldid=946721" இலிருந்து மீள்விக்கப்பட்டது