பக்கம்:நித்திலவல்லி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

499



இல்லாதவர்களால், இதயமுள்ளவர்களின் அழுகையையும், சிரிப்பையும், கண்ணீரையும், வேர்வையையும் புரிந்து கொள்ள முடியாதுதான்?” என்று அவள் சற்று முன் தன்னைக் கேட்டிருந்த சொற்கள் இன்னும் அவருடைய உள்ளத்தைச் சுட்டுக் கொண்டிருந்தன. அவரால் அதைச் சுலபமாக மறந்து விட முடியவில்லை. ஓர் அழகிய பேதையின் தூய்மையான உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து துயரப்படுத்தி அந்தத் துயரத்தின் மேல் ஓர் அரசை நிலை நாட்டித்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இப்போது அவருள்ளேயும் எழுந்தது. சேரனுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி நினைவு வரவே, உடனே இப்படிப் புறக்கணிக்க முடியாததாகவும் இருந்தது அந்தப் பிரச்னை. ‘இளையநம்பியையும் கண் கலங்கச் செய்து, காராளர் செல்வ மகளையும் கண்கலங்கச் செய்து, இவர்கள் இருவரையும் தவிர, அவருடைய அநுமானத்திலேயே அவருக்குப் புரிந்திருந்தபடி கணிகை இரத்தினமாலையையும் அந்தரங்கமாக நெஞ்சழிய வைத்து, இப்படி நாம் ஓர் அரச தந்திரச் சதுரங்கம் ஆடி விட்டோமே’ என்று எண்ணிய போது, எதற்கும் கலங்கியறியாத அவரது அந்த உள்ளமும் கலங்கியது. கழிவிரக்கப்பட்டது.

தென்னவன் மாறனின் கழு ஏற்றம், பெருஞ்சித்திரனின் மரணம் ஆகியவற்றின் போதெல்லாம் கூட ஆறுதலடைய முடிந்தது போல், இந்தக் காராளர் மகளின் வேதனையைத் தாங்கி, மறந்து ஆறுதலடைய முடியாமல் தவித்தார் அவர். அந்தத் திருமோகூர்ப் பெண் சீறிச் சினந்து ஆவேசமாக எதிர்த்து வாதிடாமல் அமைதியாக அடங்கிப் பணிந்தே, தன்னை வென்று விட்டிருப்பது இப்போதுதான் அவருக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. தம் இதயம் இவ்வளவு தவிப்பதை சிறிதும் புரிந்து கொள்ளாமல், ‘உங்களுக்கு இதயமில்லை’ என்று அவள், தம் முன்பு நின்று குற்றம் சுமத்தியதையும் நினைத்தார் அவர். தம் இதயம் தனிமையில் படும் வேதனையை அவளறியும் படி, அவளிடமே நெஞ்சைப் பிளந்து காண்பித்து விட முடியுமானால், எவ்வளவு தெளிவாயிருக்கும் என்றும் தோன்றியது அவருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/497&oldid=946727" இலிருந்து மீள்விக்கப்பட்டது