பக்கம்:நித்திலவல்லி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நித்திலவல்லி / முதல் பாகம்


இடத்தைப் பார்த்தபோது வண்டியை ஒட்டி வந்தவனும் செல்வப் பூங்கோதையும் ஒருங்கே திடுக்கிட்டனர். வண்டி வழி நெடுக ஆடி அசைந்து வந்ததினால் பூங்குவியல் சரிந்துபோய் அது நேர்ந்திருந்தது. வேகமாகத் துடிக்கும் நெஞ்சுடன் பயத்தோடு பயமாக அவள் சாகஸமே புரிந்து அவர்களை ஏமாற்ற வேண்டியிருந்தது.

உடனே அவள் விரைந்து, “உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது வீரர்களே! நீங்கள் வீண் பிரமையில் எதை எதையோ பார்ப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் கண்களில் தெரிகிறது. இதோ நான் உங்கள் பிரமை வீணானது என்று நிரூபிக்கிறேன் பாருங்கள்!” என்று கூறியபடியே வண்டியில் ஏறி, அந்த வீரன் வாள் நுனியில் சுட்டிக்காட்டிய இடத்தில் மேலும் சில பூக்களைச் சரியச் செய்து மூடியபின் அதே இடத்தில் தன் கையை வைத்துக் காட்டிவிட்டு, இப்போது நான் என் கையை இந்த இடத்திலிருந்து எடுத்து விடுகிறேன். அப்படி எடுத்த பின்பும் நீங்கள் என்கை இங்கே இருந்த நினைவோடு இந்த இடத்தைப் பார்த்தால் மறுபடியும் இங்கு என் கை இருப்பது போலவே உங்கள் கண்களுக்குத் தோன்றும். இந்தப் பிரமை ஒரு கண்கட்டு வித்தையைப் போன்றது” என்றாள்.

அவளுடைய இந்த சாகஸம் முழுவெற்றியை அளிக்கா விட்டாலும் ஒரளவு பயன்பட்டது. பூத பயங்கரப்படை வீரர்களில் இளகிய சுபாவம் உடையவன் அந்த சாகஸத்தில் மயங்கி அதை ஒப்புக் கொண்டு விட்டான் என்றாலும் மற் றொருவன் இன்னும் கடுமையாகவே இருப்பது தெரிந்தது. வேறுவிதமாக அவனை இளகச் செய்ய முயன்றாள் அவள்.

‘ஐயா, பூத பயங்கரப் படைவீரரே! உங்களுக்கு நல்ல கவியுள்ளம் இருக்கிறது. இல்லாவிட்டால் தாமரைப்பூவைக் கண்டதும் அது சர்வ லட்சணமும் நிறைந்த ஒரு கையாக உங்கள் கண்களில் படமுடியாது. கவிகள்தான் உவமானப் பொருள்களில் உவமேயங்களையும் மாறி மாறிக் காண முடியும். பாவம்! எழுத்தாணியும் ஓலைச் சுவடியும் ஏந்த வேண்டிய கைகளில் நீங்கள் வாளேந்தும்படி நேர்ந்து விட்டது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/51&oldid=715208" இலிருந்து மீள்விக்கப்பட்டது